தந்தை மகனுக்கு
கடிதம்
காலம் சென்ற
முறையாகிப் போனது
மின்னணுவின் வேகம்
இன்னும் என்னவெல்லாம்
செய்யுமோ தெரியாது!
இருந்தாலும்
இதை நான் எழுதுவது
எனக்குத் தெரிந்த
உலகை
உனக்குக் காட்டத்தான்
இச்சைகள் சுரந்த
எச்சத்தில் பிறந்த
வார்ப்பல்ல நீ
என் இலட்சியமும் கனவும்
சேர்ந்து செய்த வடிவம் நீ
என் உயிரின் உயில் நீ
நீர்த்துப் போயிருந்தாலும்
நிறத்தால் பால் என்ற
நிலை இல்லை - நீ
சுண்டக் காய்ச்சிய பால்
சுவை அதிகமானவன்!
காகிதத் தட்டல்ல நீ
கை துடைத்துப் பின்
கசக்கி எறிய;
தடகளத்தில் வென்ற
தங்கத் தட்டு நீ
பளபளப்பு மங்காது
பார்த்துக் கொள்வேன்
கால்கள் நடந்தாலும் - வேகத்தை
கைகள் சிர்படுத்துதல் போல
உன் வாழ்க்கை நடையில்
கைகளாக நான் உனக்கு...
பிள்ளைப் பருவத்தில் - என்
பிடரி முடி பிடித்து
அமர்ந்து பயணித்தாய்
நான் நடக்கும் போது
நாற்காலி ஆக்கினேன்
என் தோள்களை உனக்கு
ஏன் தெரியுமா?
எனக்குத் தெரியாத
உயரமும் தூரமும்
உனக்குத் தெரிய
வேண்டும் என்றுதான்.
அப்பனும் பிள்ளையும்
அருகருகே ஒன்றாய்
அமரக் கூசியது அக்காலம்
உனக்குத் தோழனாகி
வாழ்க்கையின் வடிவம் பற்றி
விவரிக்கிறேன்.
ஓடிக்கொண்டே இருக்கிறவரைதான்
ஜீவ நதி - இல்லையெனில்
மணற்படுகையே!
இயங்கிக் கொண்டே இருக்கிறவரைதான்
இதயம் - இல்லையெனில்
இறைச்சித் துண்டே!
உயிர்ப்போடு இருக்கிறவரைதான்
வாழ்க்கை - இல்லையெனில்
நாட்களைக் கடத்தும் நாடகமே!
வாழ்க்கைக் கணக்கை
வருடங்களால் எழுதுதல் மட்டுமே
வழக்கம் இங்கு.
வாழ்க்கையை
வாசிக்கக்கூட தெரியாதோரின்
வசதிக்காகவே
வருடங்கள் படைக்கப்பட்டன.
அப்படித்தான் என்றால்
ஆறும் ஒன்றே!
அறுபதும் ஒன்றே!!
இறந்த காலம்
நிகழ் காலம்
எதிர் காலம்
இதெல்லாம் இங்குதான்!
அண்டவெளியில்
நொடி ஏது?
நிமிடம் ஏது?
விடிவது ஏது? - பொழுது
முடிவது ஏது?
கணத்துக்குக் கணம் வாழ்வோருக்கு
கடந்த காலம் என்றும்
எதிர் காலம் என்றும்
எதுவும் இல்லை.
இத்தனை நூற்றாண்டின்
இருளை - உன்
ஒரேயொரு உரசலில்
ஒழித்து விடலாம்!
விளக்குகளால் பொழுதை
விடிய வைக்க
முடியாது மகனே;
சூரியனாய்ச் சிந்தித்திரு
சூரியச் சிந்தனைதான் தேவை
விடியலுக்கு.
நீ நிற்கும் திசையையே
உலகம் கிழக்காய்
உணர வேண்டும்.
எதையும் பெரிதென்று
எண்ணிப் பின்வாங்காதே
வானம் வரை வளர்ந்திருந்தாலும்
அடிவாரத்தில் தான்
ஆரம்பிக்கிறது மலை!
வால் அறுந்த பல்லியைப் பார்
வால் இழந்தாலும் - அது
வாழ்வை இழப்பதில்லை.
முடி இழந்தால் கூட
தலையை இழந்ததாய்
முனகுவது
மனிதன் மட்டுமே.
குறைகளைச் சுட்டி உன்னைக்
குதறிவிட விரும்பவில்லை
குறை நிலவைக் கூட
பிறை நிலவென்று
பேசி மகிழ்கையில்
பிள்ளையின் குறைகளை பெரிதாக்கி
பிரச்சாரம் செய்வோமா?
வாழ்க்கை
பந்தயக் களமடா - மகனே
பந்தயக் களத்தில் காலமெல்லாம்
படுத்து உறங்கியவன்
பதக்கம் வெல்லக்கூடுமோ?
ஆண்டு முழுவதும்
பயிற்சி வேண்டும்
அப்போது தான்
அடுத்த சுற்றுக்காவது
முன்னேற முடியும்.
தோல்வியடையும் போது
துவண்டு விடாதே
தோல்வி ஒன்றும்
தொடர்கதை அல்ல;
தொடர்கதைக்கும் கூட
முற்றுப்புள்ளி உண்டு.
தோற்கப் பிறந்தவனல்ல நீ
ஆற்றலில் எரிமலை நீ
உன்னைத் தூற்றுவோர்
கரிக்கட்டை கனல் போல
கரிக்கட்டையின் கனலுக்கு
எரிமலைகள் அஞ்சிடுமா?
கரிக்கட்டைக் கனல் என்ன
எரிமலை நெருப்பை
கடித்தா தின்றுவிடும்
சூரியக் கீற்றை
வெட்டுக் கிளிகள்
ஒடித்தா மென்றுவிடும்.....
எழுவதும் பின் விழுவதும்
அலைகளுக்கு வேண்டுமானால்
அழகாய் இருக்கலாம்
எழுச்சி மட்டுமே
மனிதனுக்கு அழகு.
உன்னை
உரசிப் பார்ப்பவர்
பார்க்கட்டுமே
உரசிப் பார்ப்பதில்
பெருமை கொள்ள
உரை கல்லுக்கு
என்ன இருக்கிறது
தங்கத்தின் தரம்தானடா தெரியும்
நீ தங்கமடா!
அப்படியே இருந்தாலும்
உரைகல்லுக்குப் பெருமை - தங்கத்தை
உரசிப் பார்ப்பதால் மட்டுமே.
புறக்கணிப்பு செய்தால்கூட
செய்யட்டுமே -
குட்டிச்சுவர்கள்
கூடிப்பேசி
தாஜ்மகாலை
தள்ளிவைக்கக் கூடுமா?
களங்கம்கூட கற்பிப்பர்
கவலை கொள்ளாதே
கூவமெல்லாம் ஒன்றாகக்
கூடி நின்று
கங்கையை களங்கம் பாடி
ஆவதென்ன அழிவதென்ன?
பகை கொள்ள - இவை
பாதை வகுக்கக் கூடாது
பகை கடக்கக் கற்றுக் கொள் - அது
பக்கபலம் கூட்டும்
ஒன்றைத் தெரிந்து கொள்
எதிரே நிற்பவன்
கையும் குலுக்குவான்
அவனிடம் கரிசனம் கொள்
பக்கத்திலேயே இருப்பவன்
முதுகிலும் குத்துவான்
அவனிடம் கவனம் கொள்!
உனக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்
முதுகுப் பக்கம் என்பது
தட்டிக் கொடுப்பதற்கு மட்டுமே
நாய் நக்கிக் குடிப்பதால்
குளம் ஒன்றும்
களவு போவது இல்லை.
வாய்ப்புகள் உனக்கு
வானம் போல
விரிந்து கிடக்கிறது!
சன்னல்கள் சாத்தப்பட்டாலும்
கதவுகள் இன்னும்
திறந்தேதான் இருக்கிறது;
செலவானது போக
களவு போனது போக
தீர்க்கப்படாத - இன்னும்
திறக்கப்படாத களஞ்சியம்
ஏராளம் ஏராளம்.
முக்காலியில் எக்கால்
முக்கியமில்லாக் கால்?
உலக முக்காலியில்
நீயும் ஒரு காலடா!
தனிமரமாய்
தனித்து விட்டாலும்
தவித்து விடாதே
தனிமரம் தோப்பாகாது என்பர்
தளர்ந்து விடாதே
தனிமரம் தோப்பு ஆக்கும்!
துன்பம் ஒரு கொடி போல - அது
படர்கின்ற மரத்தின்
பசுமையைப் பறித்துவிடும்.
விடலைப் பருவம் என்பது
சாறுண்ணிப் பருவமாகும்
நச்சு மரத்தில் படரவிட்டால்
நச்சாகத்தான் வளரும்.
கடிவாளம் போடாத குதிரை
பிடிவாதம் பிடிக்கும்
அதன் திசை நோக்கி
விடலைப் பருவமும் அப்படித்தான்!
துறையிலே கட்டப்படாத படகுக்கு
துடுப்புகளும் இல்லையென்றால்
காற்றடிக்கும் திசைதான்
கடைசி வழி;
கரையும் சேரலாம் - அன்றி
கவிழ்ந்தும் போகலாம்.
உன் படகுக்கான துறையை
நீயே முடிவு செய்
இன்னொருவர் தீர்மானிக்க
இருந்து விடாதே.
ஒழுங்குச் செய்யப்படாத கொடி
ஊரார் வீட்டு
வேலியிலும் படரும்.
வளரும் போது
ஞாபகத்தில் வை,
ஆலமரம் போல
பரந்து வளர்ந்தால்
ஆயிரம் ஆயிரமாய்
இளைப்பாறுவார்;
ஓங்கி வளர்ந்தாலும்
ஊர் தின்னும் தீயை
யார் மதிப்பார்?
மரம் ஏறுவது
உன் பங்கு என்றால்
எட்டும் வரை தாங்குவது
என் பங்கு.
சாத்தப்படாத கதவுகளோடு
காத்துக் கிடக்கிறது
சபைகள் உனக்காக.
சுவையறிந்தாலும்
சொல்ல முடியாத ஊமையின் நாவாய்
ஒரு நாளும் இராதே
அவையறிந்து பேசும்
ஆற்றல் கொள்.
சொல்லப்படாத சிந்தனை
உன்னையே அழித்துவிடும்
திறக்கப்படாத
அணைநீர் போல.
கருவறையின் பாதுகாப்புக் கூட
பத்து மாதம்தானடா
காலம் கடந்து விட்டால்
கல்லறையாகி விடும் அதுவே!
விதை
உமியைக் கிழிப்பது
விரோதத்தால் அல்ல
விதையின்
வேரூன்றும் வேட்கைதான் அது.
சரியானவைகளைத் தேடிப்பிடி
எங்கிருந்தாலும்
வாய்க்குள்ளேயே இருந்தாலும்
கடிவாளத்தைக் குதிரை
கடித்து உண்பதில்லை
நிலத்தில் கிடந்தாலும்
புல்லை குதிரை
புறக்கணிப்பது இல்லை.
செயல்களைத் தீர்மானிப்பதில்
சிரத்தை எடு.
பாவம் செய்தால்
மன்னிப்புக் கோர
பழக்கப்பட்டோம்;
பாவம் எதுவும்
செய்யாதிருக்கப்
பழக்கப்படுவது
எக்காலம்?
காரியம் ஆற்றும் போது
கவனத்தில் கொள்
சில விசயம்
சினிமா போல
சிந்தித்தது வரும்வரை
செயல்படலாம்
சில விசயம்
நாடகம் போல
நடக்கும் போதே
நல்லபடியாக
நடந்திட வேண்டும்;
சில விசயம்
நடக்கும் முன்னே
ஒத்திகைப் பார்க்கலாம்
நாடகம் போல
சில விசயம்
ஒத்திகைக் கூட
பார்க்க முடியாது
பிறப்பு, இறப்பு போல!
செறிக்க முடியாத
அமுதம் போல
உண்மை சில நேரம்
உயிர்ப் பறிக்கலாம்
சொல்லாதே!
விசம் சிலநேரம்
உயிர்க் காப்பது போல
பொய்யும் சிலநேரம்
உயிர்க் காக்கலாம் - அதை
புறக்கணித்து விடாதே!
பழையது என்றால் - பாம்பு
தோலைக்கூட கழற்றிவிடுகிறது.
பழமை என்றாலும்
பயன்தராது என்றால்
பாம்பைப் போலக் கழற்றி விடு!
நத்தையைப் பார்
நடக்கவே முடியாவிட்டாலும்
வீட்டை சுமந்தே திரிகிறது.
பழையது என்றாலும்
கடினம் என்றாலும்
அவசியம் என்றால்
சுமந்துவிடு நத்தை போல
காலம் கருதிச் செயல்படு!
ஆற்று வெள்ளத்தில் சிக்கியவனுக்கு
படகு கிடைத்தால் - அவன்
பாக்கியசாலிதான்,
மரக்கிளை கிடைத்தாலும் - அதை
மறுத்துவிடக் கூடாது
மரக்கிளையும் கரை சேர்க்கும்;
சந்தர்ப்பம் சில நேரம்
மரக்கிளை போல் கிடைக்கும்!
ஊன்று கோலின் உதவி கொண்டு
நடக்கும் போது
ஓட்டப் பந்தயத்தில் - ஓடப்புகுவது
வீரமல்ல மடமை;
தவிர்த்தல் கூட அறிவுதான் - சில நேரம்.
மட்பாண்டமாய் இருந்து கொண்டு
மலையோடு மோதுவது
அறிவு அல்ல
உளியாய் உருமாறினால்
உடைக்கலாம் மலையை.
சிற்றெறும்பைப் பார்த்து
சிங்கமென பயம் கொள்ளாதே,
சிங்கத்தைப் பார்த்து
சிற்றெறும்பென இறுமாப்புக் கொள்ளாதே
இரண்டும் ஆபத்தே.
உன்னிடம் ஒரு விண்ணப்பம் - நீ
உண்பது மட்டுமே
உனக்குச் சொந்தம்;
வீணடிப்பதோ
வேறொருவர் பங்கடா.
ஒத்த உணர்வில் இருப்பது
பசி மட்டுமே - அதைக்கூட
பார்க்காத வயிறும் உண்டு
அதைத்தவிர வேறு எதையும்
பார்க்காத வயிறும் உண்டு!
வீணாகும் உணவும்
வெறும் கோப்பைக் கனவும்
ஒரே நேரத்தில்
வெவ்வேறு வீட்டில்.
நீ
ஒரு வாய்க்கு மட்டும்
உணவு தேடாதே
ஓராயிரம் கோடி உண்டு
இங்கு வாயும் வயிறும்.
நிலா உலவும் வானம் போல
விரிந்து கிடக்கிறது வாழ்க்கை.
நிலப் பரப்பு போல
பிரிந்து கிடக்கிறது மனது.
வழுக்கைத் தலையன்
வாங்கியச் சிப்பாய்
வாழ்வை வாங்கியோர்
வரிசை நீண்டது.
கூட்டு வாழ்க்கையை
அறிமுகம் செய்தவன் - இன்று
வீட்டுக்குள்ளேயே
வேலி பிடிக்கிறான்.
கூடிப்பிணைந்தால்
தென்னை நார் கயிறாகும்
கூட்டைப் பிரித்தால்
கயிறு குப்பையாகும்.
பரந்து விரிந்த
கூட்டு வாழ்வை
மறந்து துறந்து
கூட்டுப் புழுவாய்
பெற்றோர் தள்ளி
சுற்றம் தள்ளி
தனித்து விட்டோம்
வாழ்வியலில்.
வைத்துக் காக்க
வக்கற்றப் பிள்ளைகளால்
திக்கற்று பின்
தொட்டில் கட்டிய
கொண்டியிலேயே - பெற்றோர்
தூக்குக் கயிறை
மாட்டும் அவலம்.....
வாழ்க்கை மலரும் போதே
வண்ண மயமாய்த்தான்
மலர்கிறது,
மலருக்குப் புதிதாக
வண்ணம் பூசாதே!
இயல்பை
இயல்பாகவே ஏற்றுக்கொள்.
மீன், நாவாய்
இரண்டுக்குமே வாழ்க்கை
நீரில்தான்....
நாவாய் மூழ்கிவிட்டால்
வாழ்க்கை இல்லை;
மீன் மூழ்காவிட்டால்
வாழ்க்கை இல்லை;
அதனதன் தடத்தில்
அதனதன் வாழ்க்கை
தடம் மாறுதல் ஆபத்து
தடம் மாற்றுதலும் ஆபத்தே!
கற்பனை கலந்து
விற்பன்னன் படித்த
கவிதையல்ல வாழ்க்கை.
புலி பிடித்துவிடும்
என்றாலும்
புள்ளிமான்
ஓடாமல் இருப்பதில்லை!
மான் ஓடிவிடும்
என்றாலும் -
புலி
துரத்தாமல் இருப்பதில்லை!
உயிருக்கானப் போராட்டம்
இறுதி மூச்சு இருக்கும் வரை....
ஒவ்வொரு போராட்டமும்
ஒவ்வொரு வடிவம்!
வாழ்க்கை என்பது
வாத்தியக் கருவி போல;
இசைக் கருவியில் இல்லை
இசையின் நுட்பம் - அது
இசைப்பவனிடம் மட்டுமே உள்ளது.
நீ எப்படி
மீட்டப் போகிறாய்?
பிடிப்புகளை செதுக்கினால்தான்
பிறக்கும் அழகிய சிற்பம்,
வாழ்க்கையும் ஒரு
வசிகரச் சிற்பமே....
தேவையற்ற பிடிப்பை
உதறித் தள்ளினால்
தேவையான சிற்பம் பிறக்கும்.
பழம் பெருமை பேசவே
பழகிப் போனோம் நாம்
பழம் பெருமை என்பது
தலைப் பெழுத்து (இனிசியல்)
தலைப் பெழுத்து பெயராகாது.
உன் பெயரென்பது
உன் வாழ்க்கையே
உன் பெயரை
எப்படி எழுதப் போகிறாய்?