"இரவு தொலைத்த காலை"

அடர்ந்த ஓர் அழகிய வனம்
மையிட்ட பதுமை அவள் கருவிழியாய்
கருத்த கார் கால வானம்,
நிசப்தம் கூடச் சற்று நீட்டி நிமர்ந்து
உறங்கத் துவங்கிய அந்த நீண்ட இரவின்
இறுதி ஊர்வலமாய் விடிய காத்திருக்கும்
நேரம் மணி நான்கு அது...!

உளமார உறங்கி எழுந்தால்
உள்படும் உற்சாக பார்வை என்னிடம்,
கண்களில் காலையின் தெளிவு
இடைவிடாது சிரித்துப் பொங்கிய
சின்னஞ்சிறு மேகங்களின்
மிஞ்சிய மழை முத்துக்கள் கைகளில் பொழிவு,
என் தேக ரோமங்களை நுனி இறகில் வருடுவதாய்
சீண்டி மட்டும் செல்லும் பனியில்
தன்னை தொலைத்த தென்றல்,
அதில் மெல்ல மரத்து கொண்டிருக்கும்
என் மனித தோலின் உயிர்மையை
அவ்வபோது என்னைத் தொட்டுத் தெறித்து
உரைத்து கொண்டிருந்தது அந்த ஈர மரக்கிளைகள்..!

"ஏலா மரிக்கொழுந்து வெக்க படாம வாடி கட்டிக்க .." என தன் காதலியை கொஞ்சி அழைத்து கொண்டிருந்த வண்டுகளின் ரீங்காரம்,
தேர்ந்த ஓவியன் வரைந்த ஓவியத்தில்
தெரியா பிழையாய் தன்னிலை அறியா சின்னப்பிள்ளை
தட்டிவிட்டு கலைத்தாலும்
அழகாய் தெரியும் வெள்ளை சாயங்களாய்
ஆங்காங்கே ஒளிந்திருக்கும் நில பனி கூட்டங்கள்..!
மர்மமாய் ஓர் மெல்லிய குழலிசை
தள்ளியே கேட்டது..!

வெற்றிடமில்லாமல் சருகுகள்,
பெண் வெக்கதிலிட்ட முத்த ஈரமாய் அவை நனைந்திருக்க
என் உள்ளங்கால்களில் கூட உணர்ச்சிகள்
பொங்குதோ என்ற வியப்பில் மெல்ல நகர்கிறேன்..

ஒளி வர இடையில்லாமல் ஒன்றாக கை கோர்த்து நிற்கின்றது
உயர்ந்து நெடுந்திருக்கும் அழகிய அசுர மரங்கள்,
என் அடி நடை ஒலியிலே இடையிடையே தேங்கும்
சந்த வெற்றிடத்தை தங்கள் உறக்க குரட்டையினால்
நிரப்பும் காட்டு உயிரிகளின் உறக்கம்..

சற்றென்று 'குர் குர்ர்ரோ' வென அலறிவிட்டு
அகன்று ஓடி,
மௌனத்தில் எனைத் திட்டி
மறைவில் தவறாய் அவனை மிதித்திட்டேன்
என உணர்த்தி ஓடிய அந்த குட்டி தேரை..!

அத்தனையும் நிகழ்வது கரும் இருட்டில் தான்
அதற்கென்ன ?!! இருந்துவிட்டு போகட்டுமே என
அசைந்து சென்ற என் பாதைகள் அயர்ந்தன..!
மெல்லிய மரத்தண்டில் சாய்ந்து உட்கார
என் எழுபது கிலோ இடை தாங்க திணறி
அம்மரம் பின்னே சாய,
தட தட வென தவிப்பில் கலைத்த காற்றசைவின் ஒலி,
என் மேலே தொடங்கி
மெல்ல தள்ளி சென்று மறைந்தது..!
விடை அறிய அண்ணாந்துப் பார்க்க
மெல்லிய ஓர் இளம் சிறகு தன் மௌன மொழியில்
காற்றிலே ஸ்வரம் குறிப்பதாய்
அப்படியும் இப்படியும் இடமும் வலமுமாய்
ஆடி ஆடி எனை நோக்கி மிதந்து வந்து
மெல்ல என் கண்கள் தழுவி
காய்ந்திட்ட இரு இதழ்களின் இடைவெளி நிரப்பி
முத்தங்கள் மூன்று இட்டன,
இட்டது இறகல்ல, இறகுகளை இரவல் செய்து
பறந்து மறைந்த அந்த 'தட தட' பறவை என புரிந்தது..!

தூரம் பல கடந்திருப்பினும்
தூரத்தில் கேட்கும் அந்த குழலிசை மட்டும் ஓய்ந்தபாடில்லை,
ஒலியின் அளவுபாடும் குறைந்த குறியே இல்லை..!

நகர்ந்த இடமெலாம் மண் வாசமும் மழை வாசமும் நிரம்பி வழிய
கண்ணில் தென்பட்டது ஒளி நிரம்பி வழியும்
ஓர் ஒற்றையடி வெறித்த பாதை,
கதிரவன் காணும் காலை இளம் மொட்டுகளாய்
ஆர்பரித்து பூரித்து விரைந்தேன்..!

காற்றிலிட்ட ஐந்தாறு வெளிச்ச கோடுகள் அங்கே
எட்டி பார்த்தேன் ஏன் இதுவோ என்று..
ஆஹா ...!!!
காதலனிடம் முதல் களவி கொண்டு
கன்னித்தன்மை இழந்து கொண்டாடும்
அந்த காம இரவின் கடைசியில்
அவன் கண்கள் காண இயலாமல்
கண்கள் உட்பட தேகம் முழுக்க நாணம் பூட்டி
மூடிய போர்வைக்குள் முகம் மறைத்து
ஒற்றைக்கண்ணில் மட்டும் எட்டி பார்த்து நகை கொள்ளும்
காதலி போல
கிளையிலைகளின் நடுவிலிருந்து
எனை பார்த்து பார்த்து நாணமிட்டு நகர்ந்து மறைந்த அப்பௌர்னமி முழு நிலா..!

ஒலித்த குழலோசை மறைந்தது
காதினுள் நல்ல காற்று கூட்டம் புகுந்த உணர்வு..
எங்கே இருக்கிறேன் யாரேனும் கண்டு சொல்லுங்கள் என பதட்டம்..
"ராம் ராம்...." என ஓர் ஆழ்ந்த குரல்..
கரும் இருட்டில் எங்கு தேடியும்
கண்டு கொள்ள முடியாத மானிட குரல்..
காணும் காட்சியே ஆடுது அதிருது..!

இப்போது ஒலி அளவில் பெரிதானது நெருங்கியது..
கண நேரத்தில் கண்ட காட்சி
கண்ணாடி ஜன்னலுக்கும் கரும் இருட்டு காட்டுக்கும்
மாறி மாறி திரியுது..
பனியில் மரத்த என் கன்னங்களில் பளிரென
ஓர் வெப்ப அறை விழுந்தது..
கரும் வனக்காட்சி அறவே மறைந்தது..
என் அறை ஜன்னல் மட்டுமே மங்கலாய் தெரிந்தது..
"விடிய விடிய earphones ல பாட்டு வேற உனக்கு,
எட்டரை மணி டா டேய்
அப்புறம் இன்னைக்கும் ஆபீஸ் late punch தான்..
எழுந்திரு நா .."...

இரு வினாடி வரைக்கும் இடம் ஏதும் புரியாமல்
பின் எழுந்து சென்று தேடினேன் என் பல் துலக்கியை..!!
என்றுமாய் இன்றும் கூட..!!

-ராம்

எழுதியவர் : ராம் K V (30-May-13, 5:38 pm)
சேர்த்தது : Ram
பார்வை : 122

மேலே