நந்தவனம் அழுகின்றது

நாளைய பாலைக்கு நாமே
உரமாவதோ என்று
நந்தவனம் அழுகின்றது.

ஓசோனின் பசிக்கு
உலகம் இரையாகிக் கொண்டிருக்க
உல்லாசபுரிக்கு
உயிர்கள் கொள்ளி வைத்துக் கொண்டிருக்க
நந்தவனம் அழுகின்றது.

தாவரம் எல்லாம்
பசுமையோடிருக்க
தாவரம் என்று தவமிருக்க,
தீயுகம் தேடி திரிகின்ற மனிதன்
காடுகள் அழித்து
கட்டிடம் வளர்க்கும்
கொடுமை கண்டு
நந்தவனம் அழுகின்றது.

பூக்களின் கண்ணீருக்கும்
புனித பன்னீருக்கும்
தண்ணீரை தேக்கி வைத்த வேர்கள்
வெம்மையில் வியர்த்து சருகாகும்
நாட்களின் அருகாமையை பயந்து
நந்தவனம் அழுகின்றது.

நந்தவனத்தோடு சேர்ந்து
நொந்த மனமோ ,வேறு
எந்த மனமோ அழாதா என்று
நந்தவனம் அழுகின்றது.

அழுகின்ற நந்தவனத்தின்
இதய ஓசை கேட்டும்
செவிடாகிப்போன எமது
அழிவுக்காக அழியப்போகும்
நந்தவனம் அழுகின்றது.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (2-Jun-13, 2:35 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 86

மேலே