என்னைப்பற்றி

நான்..
நேசித்த அளவிற்கு
பெற்றோர் என்னை
நேசித்ததில்லை...

காதலை நான்
காதலித்ததே இல்லை...

பணியிடத்தில்
நான் கொண்ட விசுவாசம்
அடிமைசாசனத்திற்கு
அச்சாரம் போட்டது...

உண்மைகளின்
உறைவிடமாயிருந்ததால்
உதவாக்கரை ...

எனது வாழ்வூரில்
கனவுகள் மட்டுமே
குடியுரிமைப் பெற்றுள்ளது...

விருந்தாளியாக வருவதற்குக் கூட
நினைவுகளுக்கு
நேரம் கிடைப்பதில்லை...

உழைப்பவரெல்லாம்
உயர்ந்துவிடமாட்டார்கள் என்பதன்
ஒப்பற்ற உதாரணம் ...
உழைக்கத் தெரிந்த அளவிற்கு
பிழைக்கத்தெரியாமல் போனது ...

நான்
பிறரை சுமக்கத்தெரிந்த குதிரை...
பெயருக்கு மட்டுமே ஆசைப்பட்டு
கொள்ளுக்கு பிச்சையேந்தி
களைத்துப் போயிருக்கிறேன்.....

மற்றவர்களை ஆற்றுப்படுத்துவதால்
என்னைநானே
சேற்றுக்குள்
சிக்கவைத்த செல்லாக்காசு...

சிந்தனையில் இளைஞனாய்...
பக்குவத்தில் முதியவனாய்...
முனைப்போடு இருக்கிறேன் ...

ஆயினும்...
வஞ்சமில்லா நெஞ்சமுடன்
வாழ்க்கை முழுவதும்
இருந்துவிட்டேன்...

நான் புலியாக மாற்றம்பெற முயற்சித்தபோதெல்லாம்
பூம் பூம் மாடாக
ஆக்கப்பட்டிருக்கிறேன்...

உழைக்கத்தெரிந்த எனக்கு
பிழைக்கும்வழி மட்டும்
புரியாமல் போனது...

இன்னும்
வாழ்க்கையைத்
தேடிக்கொண்டே இருக்கிறேன்...

எழுதியவர் : எம்.பழனிவாசன் (5-Jun-13, 7:55 am)
சேர்த்தது : m. palanivasan
பார்வை : 112

மேலே