தேடல் காற்றே 8B2

ஓடுகின்ற நதியிடம்
உன்னைக் கேட்டேன்
நாடி அதனுள்ளே நீரணுவானாய்

ஆர்ப்பரிக்கும் கடலிடம்
உன்னைக் கேட்டேன்
நர்த்தனமாய் அலைபுரவியில்
ஆடல் கொள்கிறாய்.......

மென்மேடை மேகத்திடம்
உன்னைக் கேட்டேன்
வன்மோகத் தீயில் தணிய
மெய் சேர்கிறாய்

சிறகடிக்கும் புள்ளினத்திடம்
உன்னைக் கேட்டேன்
சரசமாடி சிறகுடனே
விண்ணில் தவழ்கிறாய்......

மதுரம் உண்ட மதுகத்திடம்
உன்னைக் கேட்டேன்
மயக்கம் கொண்ட அதைத் தேற்ற
மாயம் செய்கிறாய்

தீந்தமிழின் சுவையிடம்
உன்னைக் கேட்டேன்
தேடி என்னை அலையாதே
தீந்தமிழ் பெண்ணே
உன்னுள் நான் உறைந்தேன்
உணர்வாய் என்றாய்........

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை அமுதா (7-Jun-13, 9:07 pm)
பார்வை : 83

மேலே