அரூபமாய் ஒரு தேன்சிட்டு...!
இப்பொழுதெல்லாம் உன்னை
தொலைக்காட்சியில்
மட்டுமே காண்கிறேன்...!
கவலைகள் என்றொன்று
அறியா பருவத்தில்
படுக்கையறை ஜன்னல் வழியே
தினமும் உன் தரிசனம்...!
வேப்பங்குச்சி வாயிலிருக்க
குறுகுறுவென உன்னையே
உற்றுப்பார்த்தபடி எத்தனையோ நாள்
மலைத்துப்போயிருக்கிறேன்...
சிறுதுரும்புகள் கொண்டு
நீ கூடு நெய்யும் நேர்த்தி கண்டு
நானும் துரும்பு தேடி அலைந்த காலங்கள்...
வாழ்வின் அறியா வசந்தங்கள்...
இணையாக பறக்கும் அழகும்
இணைந்தே இசைக்கும் கீதமும்
நான் அறிந்திரா காதலுக்கு
முகவரி எழுதி செல்லும்...
ஓர்நாள் கீச் கீச் ஒலியொன்று
புதிதாய் கேட்க...
ஒரு திருடி போல் பதுங்கி
உன்னிடம் நோக்குகிறேன்...
தாயாய் உன் சேய்க்கு
உணவளித்த அழகு, என்னையும்
தாயாய் உணர்மாற்றம் செய்தது...
ஒவ்வொரு நாளும் கைநீட்டி
உன்னை தொட்டுப் பார்க்க ஆசை,
ஆனாலும் உன் சுதந்திரம் பறிபோகுமென
அன்றே கட்டிப்போட்டேன்
என் கைகளை...
கூட்டமாய் பறக்கும் நேர்த்தியும்,
பறந்து பிடித்து விளையாடும் ரசனையும்
சொந்தங்களை காதலித்துப் பாரென
பாடம் நடத்திச் சென்றது...
இன்று நீயும் இல்லை,
மனித உறவுகளின்
இணக்கங்களும் இங்கில்லை...
உன்னோடு சேர்த்து
அவைகளையும் எங்கே கொண்டு சென்றாய்?
பல்கிப்பெருகிய வளர்சிதை மாற்றம்...
ஏனோ காணா அரூபமாய்
உன்னை மாற்றி விட்டு
மனதுக்குள் வெறுமை புகுத்தி
வேடிக்கைப்பார்க்கிறது...!
இன்றும் என் ஜன்னல்கள் திறந்திருக்கின்றன...
உன்னை தாலாட்டிய மாமரம் கூட
இப்பொழுதும் அழகாய் தலையசைத்தபடி ...
கிளைகள் மட்டும் நீயில்லாத வெறுமையாய்...
உன்னை தேடிக்கொண்டிருக்கிறேன் நான்...
வாழ்வியல் மாற்றங்களால்
எதை எதையோ தொலைத்தபடி...
மாறிட வேண்டும்
ஓர் நாள் நானும் இப்படியாக...