இளைய சமூகத்துக்கு ஒரு விண்ணப்பம்.
இளைய சமூகத்துக்கு
ஒரு விண்ணப்பம்.
மனிதப்பிறப்பு
குறைவற்ற உடல்
அன்பான பெற்றோர்
அரவணைக்கும் சுற்றம்
நல்லுயிர் நட்பு
வளமுடன் வாழ
வழிகள் ஆயிரம்
எல்லாமிருந்தும்
ஏன் சாகிறீர்
இளவயதில்?
கல்வித் தேர்வும்
காதலும் - உம்மைக்
காலனின் கைசேர்க்கும்
கருவிகளல்லவே!
வேறெங்கும் காணாத
இக்கொடுமை
ஏன் இந்நாட்டில் மட்டும்?
கல்வித் தேர்வில்
தேர்ச்சியிழப்பின்
எள்ளி நகையாடும்
இவ்வுலகு
காறித்துப்பும்
உற்றமும் சுற்றமும்
என்றெல்லாம் பயந்து
ஏன் துறக்கிறீர்
உயிரை?
வெற்றியும் தோல்வியும்
முயற்சிகளால் மட்டுமே
முடிவாவதில்லை.
தெளிவும் புரிதலும்
முறையாய் முயல்தலும்
விடாமுயற்சியும்
தேர்வில் நம்பிக்கையும்
வெற்றிக்கு அவசியம்.
அனைத்தும் இருந்தும்
அடைந்தது தோல்வியெனில்
அழுது விடுங்கள்.
பிறகு
தெளிந்து எழுங்கள்.
எதனால் தோல்வி
என்பதைத்
தெளிவாயுணர்ந்து
திரும்பவும் முயன்றால்
திறந்திடும் வெற்றிக்கதவு.
உம்மைக் காதலிக்க
ஒருவர் மட்டுமே
உலகில் பிறந்ததாய்
உணர்தல் அறிவீனம்.
நேசியுங்கள்.
நேசிக்குமுன்
யோசியுங்கள்.
காதலிக்குமுன்
கைப்பிடித்தல் சாத்தியமா
கூடி வாழ்தல் பாக்கியமா
எனக் குறைவறச்
சிந்தியுங்கள்.
நன்று எனில்
நம்பிக்கையுடன்
உளமுவந்து
உண்மைக் காதல்
புரியுங்கள்.
உற்றமும் சுற்றமும்
முற்றிலும் வருந்திட
காதல் கைகூடி வாழ்வதும்
அன்றி சாவதும்
நியாயமில்லை.
இவ்விரண்டு நிகழ்விலும்
நிதர்சனமாய்த் தெரிவது
உங்கள்
குறுகிய மனதும்
சுருங்கிய உணர்வுமே.
உங்கள் வாழ்க்கை
உங்களின்பத்துக்கு
மட்டுமேயில்லை.
உற்றத்துக்கும்
சுற்றத்துக்கும்
ஊருக்கும் - ஏன்
உலகுக்குமே
உங்களின் பங்களிப்பு
உள்ளதென்பதை
உண்மையாய் உணர்வீர்.
மனிதப்பிறப்பின்
மகத்துவம் உணர்வீர்.
வளமுடன் வாழ்வீர்
வாழ்த்திடும் உலகு.