நல்லதோர் வினை..
மாலை அலுவலகம் விட்டு வெளியே வந்ந மகேஸ்வரிக்கு பசி வயிற்றைக்கிள்ள ,உடன் வந்த அனிதாவைக ஓட்டலுக்கு டிபன் சாப்பிட அழைத்தாள்.
இருவரும் அருகிலிருந்த தரமான ஒரு ஓட்டலுக்குள் நுழைய,எத்தனையோ டேபிள்கள் காலியாக இருக்க,ஆட்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட டேபிளில் உட்காருவதிலேயே மகேஸ்வரி குறியாக இருந்தாள்.
குறிப்பிட்ட அந்த டேபிள் காலியானதும் ,இருவரும் அதில் அமர்ந்து டிபன் சாப்பிட்டு விட்டு டிப்ஸ் ,பில் இவைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்தனர்.
அனிதா, மகேஸ்வரியிடம் ,"ஏய் மகேஸ் , ஓட்டலில் குறிப்பிட்ட ஒரு டேபிளில் உட்காருவதில் ஆர்வமாக இருந்தாயே, அந்ந டேபிள் சர்வருக்கும்,உனக்கும் காதல் கீதலுனு ஏதாவதா..' என இழுத்தாள்.
"சேச்சே, அதெல்லாம் ஒன்றுமில்லை,போன வாரம் 'ஏழை முரசு' பத்திரிகையிலே அந்த சர்வர் பேட்டி கொடுத்திருந்தார். தனக்கு வர்ற டிப்ஸ்களையெல்லாம் வார வாரம் விழியிழந்தோர் பள்ளிக்கூமத்திற்கு நன்கொடையா கொடுத்திடறாராம். அதான் நாம ஓட்டலில் கொடுக்கிற டிப்ஸ் நல்ல காரியத்திற்குப் பயன்படட்டுமேன்னுதான் அந்தக் குறிப்பிட்ட சர்வரோட டேபிளில் உட்கார விரும்பினேன்" என்றாள் மகேஸ்வரி.
நெகிழ்ந்து போனாள் அனிதா!