லாவண்யா
என் பெயர் லாவண்யா. இரண்டு நாட்களாக தானாக பேசிக் கொண்டு, தானாக சிரித்துக் கொண்டு, அதற்காக சந்தோஷமும் பட்டுக்கொள்ளும் லாவண்யா நான்தான். எதுவும் சரியில்லை. ஆனால் இந்த நிமிடங்கள் இதுவரை என் வாழ்வில் இல்லாத நிமிடங்களாக இருக்கின்றன. கேட்டுப்பழகிய பாடல்களில் கூட கேட்காத வரிகள் வருவதாக உணர்கிறேன்.
இதற்கெல்லாம் அவன் காரணமா? இல்லை நான் காரணமா? தெரியவில்லை. ஆனால் அவனிடம் நான் பேச வேண்டும். நிறைய பேச வேண்டும். இது நிச்சயமாக தெரியும். எனக்குக் கொஞ்சம் பரதம் தெரியும் என்று அவனிடம் சொல்ல வேண்டும். அவன் அதற்கு முன்பு யாரையாவது காதலித்திருக்கிறானா என்று கேட்க வேண்டும். கார்த்திகா என் உயிர்த்தோழி என்று சொல்ல வேண்டும். அவனுக்குப் பிடித்த விஷயங்கள் என்னவென்று கேட்க வேண்டும். எனக்கு வெள்ளை-கருப்புச் சுடிதார் ரொம்ப பிடிக்கும் என்று சொல்ல வேண்டும். அவனிடம் என் புகைப்படம் உள்ளதா என்று கேட்க வேண்டும்.
அவனிடம் முதலிலேயே சொல்லிவிட வேண்டும் "நாம் நல்ல நண்பர்களாக இருப்போம்" என்று. அப்பாவிற்கு வேறு ஏதாவது விஷயம் என்றால் பிடிக்காதே! அக்கா விஷயத்தில் நான் பார்த்திருக்கிறேன். இந்த வரிகளை நான் சொல்வதற்குள் அவன் சொல்லிவிட்டால்! நான் முந்திக் கொள்ள வேண்டும். ஒருவேளை நான் சொன்னவுடன் அவன் 'சரி' என்று சொல்லிவிட்டால்!!
உண்மையிலேயே நான் அவனிடம் நண்பனாகத் தான் முயற்சி செய்கிறேனா? நியாயமான சந்தேகம் தான். உண்மையை ஒப்புக்கொள்ள மனம் வரவில்லையே.
அதெல்லாம் சரி,... அவன்? அவன் என்ன நினைக்கிறான். ஓரிரு முறை பார்த்துப் புன்னகைத்திருக்கிறான். நிமிடத்திற்கும் குறைவாக ஓரிரு முறை பேசியிருக்கிறான். அவ்வளவு தானே! இருக்கட்டும். அவன் கார்த்திகாவிடமோ அஞ்சலியிடமோ பேசியிருக்கலாமே. ஏன் என்னிடம் மட்டும் பேசினான். ஆனால் அவன் பார்வையில் நான் ஏதோ ஒன்றைப் பார்த்தேனே. அடி போடி பைத்தியக்காரி.
எனக்குக் கண்ணாடியைப் பார்க்கனும் போல இருக்கு. ஆனா, அதுக்கு முன்னாடி ஒரு வேலை செய்யனும். கொஞ்ச நாளுக்கு முன்னாடி கழட்டி வச்ச கொலுசைக் காலில் மாட்ட வேண்டும். கொலுசைத் தேடி எடுத்தேன். புன்னகைத்துக் கொண்டே காலில் கொலுசை மாட்டினேன். நடந்து பார்த்தேன். இந்தக் கொலுசு சிரிக்கும் 'ஜல்-ஜல்' சிரிப்பு எனக்குப் பிடித்திருக்கிறது.
அந்த ஐந்தடி கண்ணாடி முன் போய் நின்றேன். முதன்முறையாக நான் வெட்கப்படுவதை முழுவதுமாக நானே பார்த்து ரசிக்கிறேன். தலை முதல் அடி வரை என் கண்களைக் கொண்டு சென்று புன்னகைக்கிறேன்; மீண்டும் நாணம் கொள்கிறேன்.
வெட்கத்தைக் கொஞ்சம் விலக்கி வைத்து விட்டு, ஒரு ஓவியனைப் போல என் முகத்தை உற்று நோக்கினேன்.
"ஏன் இந்த பெரிய பொட்டு? சின்னது வைத்தால் நல்லா இருக்குமே".
அந்த பெரிய பொட்டை மெல்ல எடுத்துவிட்டு, சின்ன பொட்டு ஒன்றை ஆள்காட்டி விரலில் எடுத்து நெற்றியின் நடுவினைத் தேடி, புருவங்கள் இரண்டிலிருந்தும் சமமான இடைவெளியில் வைத்து, மெல்லிய அழுத்தம் கொடுத்து ஒட்டினேன்.
கண்களின் முன் வந்து விழுந்த முடியினைக் காதுகளுக்குப் பின்னால் தஞ்சம் புகுத்தினேன்; தலையை நிமிர்த்தி, போரில் வென்ற அரசனைப் போல, மீண்டும் கண்ணாடியைப் பார்த்தேன். என் அழகில் கர்வம் கொண்டேன். புன்னகைத்து நாணினேன். நாணி புன்னகைத்தேன்.
"ஒரு கேணி போல ஆச ஊறுதே....
மரு தாணி போல தேகம் மாறுதே...."
எங்கோ எப்பொழுதோ கேட்ட பாடல் இப்பொழுது மனதில் ஒட்டிக் கொண்டது.
"அம்மா.... அம்மா...."-அம்மாவைத் தேடி சமையலறைக்குச் சென்றேன்.
"என்னடி சீவி சிங்காரிஞ்சிட்டு வந்திருக்க..."
"அம்மா எனக்கு மருதாணி போட்டு விடேன்"
"முன்னாடி கேட்டதுக்குப் பனியில யாரு போடுவா-ன்னு கேட்ட..."
'பரவாயில்லம்மா... போட்டு விடேன்"
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இரு கைகளிலும், மருதாணியுடன் படுக்கையில் படுத்திருந்தேன். தூக்கம் இல்லை. எப்பொழுது வரும்? தெரியவில்லை. ஆனால் காலையில் இந்த மருதாணி எவ்வளவு சிவந்திருக்கும் என்று மட்டும் தெரியும். தூக்கமும் வரவில்லை; புரண்டு படுக்கவும் வழியில்லை. இருந்தும் இந்த அவஸ்த்தை எனக்குப் பிடித்திருக்கிறது.