தூது போ தமிழே !
(அகவல்)
எனக்கு இதனால் இழப்பு இல்லை
எனகென வந்தால் வரட்டும் பார்ப்போம்
இப்படி இருந்தே இனமதை இழந்தோம்
தப்பிதைத் தொடர்ந்தால் தமிழினிச் சாகும்
தாயை வெறுத்தல் தனயனுக் கழகா?
மாயை ஆங்கில மயக்கம் ஏனோ?
உப்பிட்டு உண்ணும் உணர்விலாத் தமிழா
துப்பிலாப் பிறவியே துணிவிலாக் கோழையே
அன்னையின் சேலையை அடுத்தவன் இழுக்க
கண்கள் சிவக்க கைகளை முறுக்கி
அடுத்தவன் இடுப்பை அடித்து ஒடித்து
தடுத்து நிறுத்தும் தனையனைப் போல
உன்மொழி இங்கே ஒடுங்கிடும் போது
உன்வாய் செவிவிழி ஓங்குதல் வேண்டும்
தமிழைத் தாழ்த்திட தரமிலாச் சிலபேர்
உமியுள் நெருப்பை ஊதித் தெளிக்க
சிரமது தாழ்ந்து சிந்தனை மழுங்கி
மரமாய் முடமாய் மயக்கம் கொண்டு
நிரந்தர மூட நித்திரைக் கலைக்க
மூளைச் சலவையின் முடக்கம் நீக்க
காலையில் தோன்றும் கதிரவன் ஒளியாய்
பேதைமை அகற்ற விரைவாய்
தூதுபோ தமிழே தூதுபோ தமிழே!!
வெ. நாதமணி
04/08/2013