கடவுளுக்கு தெரியும் கணக்கு

பெரியம்மா வீட்டு
சேவலொன்றை
நாய் பிடித்துக்கொண்டோடிற்று
விறாந்தையில் படுத்திருந்த
வளர்ப்பு நாய்
தன் பங்கிற்கு குரைத்துவிட்டு
படுத்துவிட்டது!
'அடீக் அடீக்" என
கத்திக்கொண்டோடிய
பெரியம்மாவினால்
அடிவளவுக்குள் போக முடியவில்லை
'அருமந்த சேவல்
ஆதிவைரவனுக்கு நேர்ந்தது"
என்றபடியே திரும்பினாள்
போனவருடம்
மழைகால இருட்டில் வைத்து
மூத்தவனை
நாய் கடித்தபோது
கூட்டுக்குள்ளிருந்து
சேவலொன்றை எடுத்துவந்து
மகனை முழுவதுமாக
சுற்றியபின்
'அப்பனே வைரவா
பிள்ளைய காத்துக்கப்பா" என்றபடி
நேர்ந்துவிட்டாள்
ஆதிவைரவர் கோயிலுக்கு.
இந்த வருடம் பிறந்து
இத்தனை மாதம் கடந்தும்
வைரவர் கோயிலுக்கு
சேவலை கொடுக்கும் எண்ணம்
வரவேயில்லை பெரியம்மாவுக்கு

எழுதியவர் : மு. யாழவன் (4-Aug-13, 10:18 pm)
பார்வை : 81

மேலே