.......இறவாக் காதல்........
.......இறவாக் காதல்........
(பாகம் 1 )
பனிபடர்ந்த புல்வெளி... வெண்ணிலவின் மயக்கும் ஒளி, மயிலிறகாய் வருடும் தென்றல், நிசப்தமான இரவு. தனிமையான பொழுது. நித்திரையின் சுகமான அணைப்பில், ஊரே அடங்கியிருக்கும் வேளையில், அவள் மட்டும் தூக்கத்தை எங்கேயோ தொலைத்து விட்டு, துக்கத்தை கரங்களில் ஏந்தியவாறு, தன் வீட்டுத் தோட்டத்தில் பவனி வந்தாள். வானவெளியில் முகிழ்கள் ஒன்று சேர்வதும், பிரிவதுமாக, ஊடலும் கூடலுமாக ஒரு மானசீக விளையாட்டினில் ஈடுபட்டிருக்கும் காட்சி கண்களுக்கு ரம்யமாக இருந்தன... இந்நேரம் ஒரு கவிஞன் இந்த சூழ்நிலையில் இருந்திருந்தால் கவிதையாய் காவியம் படைத்திருப்பான். அவளுக்கு காட்சிகளில் ரம்யம் கவிதையை தோற்றுவிக்கவில்லை.. மாறாக கண்ணீரையும், கடந்தகால நினைவுகளையும் ஒருசேர தொடர்வண்டி போல் கண்முன் நிறுத்தின...
அவளின் பால்ய வயதினில், பள்ளிப்பருவங்களில் ஆரம்பித்த நட்பு அலைஅலையாய் காட்சிகளை திரையிடப்பட்டன மனக்கண்ணில். காதல் என்றால் என்ன என்று தெரியாத வயதில், ஒன்பது வயதில் தன்னுடன் படிக்கும் அவன் மேல் உயிராய்க் கிடந்தாள். அவள் அம்மா ஆசிரியையாக இருந்த அந்த வகுப்பில் தான் அவனும் அவளும் படித்து வந்தனர். வீட்டில் அருகருகில் வசித்து வந்ததாலும், இருவரின் பெற்றோர்களும் நெருங்கிய நட்புடன் இருந்தபடியாலும், வகுப்பிலும் அவனருகில் தான் அவள் அமர்ந்திருந்தாள். அவன் கரங்களைப் பிடித்தபடி நடப்பதிலும், அவனுக்கு தெரியாத பாடங்களை சொல்லிக் கொடுப்பதிலும், தனக்கு தெரியாதவற்றை அவனிடம் மட்டுமே கேட்டு தெரிந்துக் கொள்வதிலும் அவள் உலகமே அவன் என்றிருந்தாள்.
வீட்டிலும் சரி, உறவினர்களின் சந்திப்பிலும், பெரியவர்கள் ஒன்று கூடும் சந்தர்ப்பங்களிலும், அவள் அவனை விட்டகலவேயில்லை. இருப்பதை அவனுடன் பகிர்ந்து உண்பாள். யாராவது அவனைத் திட்டினாலோ, பழித்தாலோ, அவர்களிடம் சண்டைப் போடுவாள். 'நீ பெரியவளாய் ஆனபின் என்ன வேலை செய்வாய்?' என்று மற்றவர்கள் கேட்டால், " நான் அவனைக் கல்யாணம் செய்து கொண்டு வீட்டில் இருப்பேன்" அவனை ஒட்டியவாறு நின்று அவன் முகத்தை செல்லமாக நோக்கியவாறு சொல்வாள். பெரியவர்கள் அனைவரும் அவர்களைப் பார்த்து சிரிப்பார்கள். சின்ன பெண் சிறுபிள்ளைத்தனமாக பேசுகின்றது என்று கேலி செய்வார்கள். அவர்கள் இருவரின் பெற்றோர்களும் சம்மந்தி, சம்மந்தி என்று கிண்டலாய் பேசிக் கொள்வார்கள்.
அவளின் பாசமும் அன்பும், அவனின் நேசமும் சரிசமமாகவே இருந்தது. அவளுக்கு சிறிது உடல்நலக்குறைவு என்றாலும் அவன் துடித்துப் போவான். அவளும் அப்படியே... ஒரு நாள் தலையில் இடிபோல் ஓரு சேதி வந்தது. பெரியவர்களுக்கு அது பெரிய விஷயம் இல்லை. அவளாலும் அவனாலும் தான் அதைத் தாங்க முடியவில்லை. இராணுவத்தில் வேலைப் பார்க்கும் அவன் தந்தைக்கு வேலை மாற்றலாகி வேறு மாநிலம் செல்லவேண்டும். எல்லோரும் பள்ளி மாற்றுவது, பொருட்கள் வாங்குவது, அண்டை அயலாரிடம் விடைபெறுவது என்று மும்முரமாக இருக்கையில், அவள் அவன் கரங்களைப் பிடித்தபடி தேம்பித் தேம்பி அழுதாள். அவன் சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையாச்சே.. வெளியில் அழுவதைக் காட்டிக் கொள்ளாமல், அவளை ஆறுதல் படுத்தினான். புறப்படும் நேரம் வந்தது.. தோட்டத்தில் தனியே அமர்ந்து அழுது கொண்டிருந்த அவள் அருகே வந்த அவன், மெல்ல தோளைத் தொட்டான். திடுக்கிட்ட நிமிர்ந்த அவள், அவனைக் கண்டதும் ஓவென்று கதறியவாறு அவன் இரு கன்னங்களிலும் இறுக முத்தமிட்டாள். அவனும் கண்களில் நீர் தாரைதாரையாக வழிந்தோட வாகனத்தில் ஏறி அமர்ந்தான். வண்டி கிளம்பியது.. கையசைத்தான். அவளும் கையசைத்தாள். ஆனால் இருவருக்கும் தெரியாது அதுதான் அவர்களின் கடைசி சந்திப்பு என்று.........
(தொடரும் அடுத்த தவணையில்.......)

