நம் சுதந்திரம்

வந்தாரை வரவேற்ற
அன்பு நெஞ்சங்கள்
அடிமை ஆனார்கள்..
சோம்பேறி அரசர்கள்
சொகுசு காண
அரசை அடகு வைத்தார்கள்..
அடிபணிய வைத்த
ஆங்கிலேயர்
அரியணை ஏறினார்கள்..
ஆறுமணிக்கு மேல் ஊரடங்கு,
அவர்களுக்கென்று ஒரு சட்டம்..
ஆயிரம் விதமாய் வரி..
கப்பம் கட்டவில்லையெனில் கைது..

போர்வாள் தூக்கி
நெஞ்சு நிமிர்த்திய இந்தியரை
துப்பாக்கி காட்டி
குனிய வைத்தனர்..
ஐந்து படை கொண்ட
அரசனையும் அதிகாரத்தால்
அடக்கி வைத்தனர்..

அண்டை நாட்டு நாய்க்கு
அடிபணிந்து வீழ்வதினினும்
வீழ்வதே மேலென்று
வெகுண்டெழுந்தார் சிலர்..
உயிர் கொடுத்த சிலர் கண்டு
வெறி கொண்டு எழுந்தனர் பலர்..
கலகம் பிறந்தது..

கப்பம் கட்ட மறுத்த
கட்டபொம்மனும்,
கப்பலோட்டிய தமிழனும்,
பாட்டெழுதி பதறவைத்த
பாரதியும்,
நெஞ்சு நிமிர்த்திய நேதாஜியும்,
வஞ்சம் தீர்த்த வாஞ்சிநாதனும்,
சாவிலும் சளைக்காமல்
கொடி உயர்த்திய குமரனும்,
அமைதியாய் கூடம் சேர்த்து
அறவழியில் போராடிய
காந்தியும்,
சுதந்திர பாதையில் நடக்க,
தொண்டர்களும் பின்னால் நடக்க,
பாதையில் கிளம்பிய
சுதந்திர புழுதியில்,
மூச்சு திணறி பதறி போனான்
ஆங்கிலேயன்..

நிமிர்ந்த நெஞ்சங்களை
சுட்டு தள்ள
குண்டுகள் போதவில்லை.. !
அடித்தாலும் உதைத்தாலும்
சுதந்திர தாகம் அடங்கவில்லை!
விட்டால் போதுமென
பதறி ஓடினான்..

விண் அதிர, மண் அதிர,
மலர்ந்தது சுதந்திரம்..!
அடிமை விளக்கு அணைந்தது!
இந்தியர் அரசு அமைந்தது!
அறுபத்தாறு வருடம் ஆகியது!

கம்பத்தில் கொடி ஏற்றி,
காகிதக்கொடி நெஞ்சில் தாங்கி,
கொடுத்த மிட்டாய் வாயில் போட்டு,
கரைவதற்குள் மறைந்துவிடும்
நாட்டை பற்றிய சிந்தனை!

நமக்கென்று ஒரு குடும்பம்,
தனக்கென்று சில ஆசைகள்,
இடையில் எதற்கு நாடு?
தலைவர்கள்
சுயநலம் நினைத்திருந்தால்
சுதந்திரம் நமக்கு ஏது?

உயிர் கொடுக்க வேண்டாம்
உண்ணாவிரதம் இருக்க வேண்டாம்
செக்கிழுக்க வேண்டாம்
சிறை செல்ல வேண்டாம்...

உன் மூளையை
அண்டை நாட்டுக்கு
அடகு வைக்காமல் இரு..!

சொந்தமெல்லாம் இங்கிருக்க
தொழில் எதற்கு வேறு நாட்டில்?

உன் நாடு கொடுத்த அறிவை
உன் நாட்டுக்காகவே பயன் படுத்து..!
உன் மக்களுக்கு வேலை கொடு..!

ஒருவனாக இருந்த நீ
தலைவனாகு...!
நாடும் முன்னேறும்..!
அதிலுள்ள உன் வீடும்
முன்னேறும்..!

என் மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துக்கள்...!

எழுதியவர் : மாடசாமி மனோஜ் (15-Aug-13, 3:07 am)
Tanglish : nam suthanthiram
பார்வை : 726

மேலே