இறவாக்காதல் (4)

...இறவாக்காதல்.....
(பாகம் 4..)

காலை மணி 11.35 ஆகியிருந்தது. அறிவியல் பாடத்தில் மும்முரமாக எழுதிக் கொண்டிருந்த அவளை 'கவிதா' என்றழைத்த ஆசிரியரின் குரல் நிமிர வைத்தது. வகுப்பறையின் வாசலில் தலைமையாசிரியரும், அம்மாவுடன் ஒரே பள்ளியில் பணியாற்றிவரும் பக்கத்து வீட்டு ஆசிரியரும் நின்று கொண்டிருந்தனர். அவரை 'ஐயா' என்று அழைக்கும்படி அம்மா சொல்லியிருந்தார்கள். பதட்டமாக எழுந்து வாசலுக்கு ஓடினாள். ஐயாவின் கண்கள் கலங்கியிருந்தன. சோகம் முகத்தில் பட்டவர்த்தனமாக தெரிந்தது. 'என்ன ஐயா?' கேள்வியை இவள் தொடுக்க, பதிலை தலைமையாசிரியர் கொடுத்தார். தேசிய மொழியில், 'கவிதா உனக்கு இவரைத் தெரியுமா?' தெரியும் என்பதற்காக தலையை ஆட்டினாள். "அப்படியென்றால் நீ இவருடன் கிளம்பிச் செல். உன் அப்பா மருத்துவமனையில் இருக்கின்றார். ஆங்.. அப்படியே உன் பள்ளிப் பையயும் எடுத்துக் கொள்" தலைமையாசிரியர் விறுவிறுவென்று சொல்லி முடிப்பதற்குள், ஓடிப்போய் புத்தகப்பையை எடுத்து வந்தாள் அவள். 'அப்பாவிற்கு என்னாச்சு... ஐயா?' மனம் பதைபதைக்க வேகவேகமாக வாகனத்தை நோக்கி நடக்கும் ஐயாவின் பின்னே ஓடினாள் கவிதா.

மனைவியையும் மகளையும் அவரவர்கள் பள்ளியில் இறக்கி விட்டு, தன் பணிமனைக்கு செல்லும் வழியில் குறுக்கே வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டியை மோதுவதிலிருந்து தவிர்க்க, பக்கவாட்டில் வாகனத்தை வளைத்த அப்பா, கட்டுப்பாடு மீறி அங்கிருந்த மரத்தில் மோதியிருக்கின்றார். அப்படியே நெஞ்சில் கையை வைத்தபடி மயங்கிவிட்டாராம், அவ்வழியே வந்த அப்பாவின் நண்பர் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று, தீவிர கண்காணிப்பில் அப்பா அனுமதிக்கப்பட்டு, விவரம் அம்மாவுக்கு தெரியப்படுத்தப்பட்டதால், ஐயா அவளை அழைத்துப் போக வந்தாராம். இவற்றையெல்லாம் பயணிக்கும் நேரத்தில் ஐயாவிடமிருந்து அவள் தெரிந்த விவரங்கள். "இறைவா, என் அப்பாவிற்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது" ஆண்டவனிடம் இறைஞ்சினாள் கண்களில் தாரைதாரையாக கண்ணீர். விசும்ப தொடங்கினாள்...

அப்பாவை பார்த்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது. அருகில் அம்மா. இவளைக் கண்டதும் ஓடி வந்து அணைத்து அழுதார்கள். அப்பாவிற்கு செயற்கை முறையில் சுவாசிக்கும் கருவியை மாட்டியிருந்தார்கள். இருதயத் துடிப்பினை சீராக்கும் சில கருவிகளை பொருத்தியிருந்தார்கள். மெல்ல அருகில் சென்றாள். அப்பா கரத்தை தன் கைகளில் இறுகப் பிடித்தவாறு "அப்பா" என்றழைத்தாள். இவளுக்காகவே காத்திருந்ததுப் போல் அப்பா கணகளைத் திறந்தார். சுவாசப்பையை நீக்கிட சொன்னார். "கவிதா அழாதம்மா.. நன்றாகப் படித்து ஆசிரியையாகி விடம்மா.. அம்மாவைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்.. நீ என் செல்லம்டி.." அப்பா திணறி திணறி சொன்ன வார்த்தைகள் அவை. "அப்பா, அப்பா" என்று அவர் கைவிரல்களைப் பிடித்தவாறு அழுதாள். அவளுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. சிறிது நாழிகைக்குப் பின் தாம் பிடித்திருந்த அப்பாவின் விரல்கள் தொய்ந்து போனதை உணர்ந்து, நிமிர்ந்து அப்பா முகத்தைப் பார்த்தாள். அவள் அப்பாவின் முகம் சாய்ந்திருந்தது. விழிகள் மூடியிருந்தன. இருதய துடிப்பினைக் காட்டும் கருவி நிசப்தமாக இருந்தது..

அதிர்ச்சியில் உறைந்து போனாள் கவிதா. அம்மாவின் கதறல் அனைவரையும் கண்ணீர் விட வைத்தது. அதற்குமேல் சிறுபெண் அவளிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை. மளமளவென்று காரியங்கள் நடந்தன.. வந்தவர் போனவர், உற்றார், உறவினர்கள் எல்லோரும் 'காரியம்' முடிந்தகையோடு விடைபெற்று சென்றனர். அவள் அம்மாவின் அண்ணனும், அண்ணியும் மட்டும் வீட்டில் இருந்தனர். அவள் அப்பாவின் படம் பெரிதாக்கப்பட்டு மேஜையில் வைக்கப்பட்டிருந்தது. அவள் அருகில் உட்கார்ந்து அப்பா முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். புன்னகைக்கும் முகம்... புன்னகையா... அப்பாவின் கடைசி புன்னகை நினைவிற்கு வந்தது. பள்ளி விடுமுன் 'என்னமா?' என்று கேட்டு அழகாக சிரித்தாரே..நான் கூட எவ்வளவு அழகு அப்பா' என்று கண்வைத்தேனே.. மனதிற்குள் கலங்கினாள். "அப்பா. சூரியன் மேற்கில் அஸ்தமிக்கும் சமயத்தில், இன்னும் சிறிது நேரத்தில் தான் மறைந்து விடும் என்று தெரிந்திருந்தாலும், அந்தக் இறுதி நொடியில்,அளவிற்கதிகமான ஒளிக்கீற்றுகளை அள்ளித் தெளித்து வானத்தையே வண்ணக்கோலமாக்கி விட்டு தான் மறையும். அதுபோல் நீங்களும் பிரிவோம் என்று தெரிந்துதான் செல்லமாய், அழகாய் சிரித்தீர்களா" மானசீகமாக அப்பாவிடம் பேசினாள். ஆறடி உயரத்தில் ஆஜானுபாவமாக இருந்த அப்பா, நான்கு சட்டத்திற்குள் சிறையுண்டு இருக்கும் காட்சியை காண இயலவில்லை. எழுந்து தோட்டத்திற்கு சென்றாள்.

அவளும் அவனும் பதியப்படுத்திய ரோஜாச் செடிகள் இரண்டிலும் பூக்கள் மலர்ந்திருந்தன. அமர்ந்தாள் அருகில். செடிகளை வருடியபடியே அவன் மனதில் வாழும் அவனிடம் பேசினாள். " கண்ணா, என் அப்பா இறந்துவிட்டார்.. என் மனம் அதீத சோகத்தில் இருக்கின்றது. நீ எங்கிருக்கின்றாய்... அப்பா இறந்துவிட்டார் என்பதை உனக்கு தெரியப்படுத்தக் கூட வழியில்லாமல் இருக்கின்றேன்." மனதிற்குள் கதறினாள். அச்சமயம் அவளைத்தேடி அம்மாவும் மாமாவும் அங்கு வந்தனர். " கவிதா, இனிமேல் நீங்க இங்கு தனியாக இருக்க வேண்டாம், எங்கள் வீட்டிற்கு வந்துவிடுங்கள். அதுவும் உன் தாத்தா வீடுதான். உங்கள் இருவருக்கும் பள்ளி மாற்றிவிட்டேன். இங்கேயே இருக்கையில் அப்பா நினைவில் இருவரும் அதிகம் வேதனைப்படுவீர்கள்" என்று தங்கைப்பாசம் மிகுந்த அண்ணனாக, மாமா அவளிடம் கூறினார். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தாயை நோக்க, அம்மா கண்களில் இசைவையும். கரங்களில் அழுத்தத்தையும் கொடுத்து தன் சம்மதத்தை தெரிவித்தார்.

அடுத்த இரண்டு நாட்களில் அவசரகதியாக அனைத்தும் நடந்தேறி, இதோ வாகனமும் தயாராக காத்திருந்தது அவர்களை ஏற்றிச் செல்ல. அண்டை வீட்டுக்காரர்கள் எல்லோரும் வழியனுப்ப காத்திருக்கையில் இவள் அவசரமாக ரோஜா செடியிடம் சென்றாள். ஒரு வெள்ளை ரோஜாவையும், சிவப்பு ரோஜாவையும் பறித்துக் கொண்டு, இரண்டு செடிகளையும் வருடி முத்தமிட்டு சில சொட்டு கண்ணீர்த் துளிகளையும் காணிக்கையாக்கி விட்டு வந்தாள். அனைவருக்கும் கையசைத்தவாறு வாகனத்தில் அமர்ந்தாள். வண்டி மெல்ல நகர்ந்தது. அவளும் அவனும் விளையாடிய ஊஞ்சல், ஏறிய மாமரம், ஒளிந்து விளையாடிய கிணற்றடி, சுண்டலுக்கு போட்டிப் போட்டு வாங்கிய சிவன் கோயில், ஒன்றொன்றாக தாண்டி செல்கையில் மனம் வலித்தது,. " கண்ணா, நீ இருக்கும் திசை நானறியேன்... நான் போகும் திசையையும் நானறியேன்... எத்திசை நான் சென்றாலும், எந்தன் தேடல் நீ இருக்கும் திசைதானே,, நீ அறிவாயா?..." கதறிடத்துடிக்கும் ஆழ்மனதை இரு ரோஜா மலர்களை இறுக்கியணைத்தபடி சாந்தப்படுத்த முயற்சித்து விழிகளை மூடியவாறு இருக்கையில் சாய்ந்தாள். வண்டியின் வேகம் அதிகரித்தது அவள் இதயத் துடிப்பு போல.....

(பயணம் தொடரும்......)

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (15-Aug-13, 7:45 am)
பார்வை : 168

மேலே