கருவறையில் பொன் மகள்....!
அம்மாவின் ஓர் கருவறையில்
அணுவணுவாய் வளர்கின்றேன்
இருள் மூட கிடக்கின்றேன்
இதமோடு நான் இருகின்றேன்
அன்னக்கொடி தொப்புள்வழி
அடிவயிற்றில் உறிகின்றேன்
இதயத்தின் நல் துடிப்போசை
இரண்டிரண்டாய் கேட்கின்றேன்
கைகால்கள் மிக சுருட்டி
பைக்குள்ளே நீந்துகின்றேன்
அப்பாவின் ஆசை முத்தம்
அம்மாவின் அன்பு சத்தம்
அதிசயமாய் உணர்கின்றேன்
அமைதியாய் உறங்குகிறேன்
தசமாதம் தன் உடலோடு
தாங்காயென் சுமை தாங்கி
தன்னுயிராய் காத்தவளை
தாயெனும் வரம் கொடுக்க
தலைபிள்ளை விழா எடுக்க
அழுகையுடன் பிறக்கின்றேன்
அள்ளி அணைத்து எடுப்பீரோ
ஆணில்லை என அறிவீரோ
அப்பா கையில் கொடுப்பீரோ
அன்னை அமுதம் தருவீரோ
தூளியில் என்னை இடுவீரோ - இல்லை
துள்ளி பால் தந்து அழிப்பீரோ..?
-----------------------------------------------------
(கள்ளி பாலால் பள்ளி கொண்ட பிஞ்சுகளுக்காக..)