விழித்த என் சிறு பெண்மை
![](https://eluthu.com/images/loading.gif)
* கட்டில் தாளத்தில்
கடமை முடித்தாய்.
நன்மைக்கும்,தீமைக்கும்
இடையே
கலப்பின பசுவை நான்.
* உன் சொல்லம்புகளை எதிர்த்தேன்
என் மௌனத்திரையால்.
தினமும் எரிகிறேன் உன்
அசிட் வார்த்தைகளில்.
* கழுத்தில் கட்டிய தாலியால்
என் கணவன் நீ!
ஆனால்
நான் மனத்தால்
நினைத்தாலே போதும்
இழக்கும் என் பெண்மை!
ஆனாலும் தோன்றவில்லை.
உன்னில் எதற்கோ நான்
அடிமை.
*அன்பான வார்த்தைகளில்லை,
அணைப்பான கைகளில்லை,
கனிவான பார்வையில்லை,
ஆனாலும்,
விரும்புகிறேன் உன்னை.
*வளரும் வயற்றுடன்,
வாழ்கிறேன்-வளர்வது
உன் நகலென்று உணராமலேயே!
*உனக்கு பழமை கூட கூட
உன் நகலின் இளமை கூடுகிறது.
உன் ரத்தம் உன்னை விட
அதிகமாய் கொதிக்கிறது.
*இளமையின் இம்சைகளையும்,
முதுமையின் வசைகளையும்,
பொறுக்க நான் என்ன பூமாதேவியா?
சாதாரண பெண்.
*முனங்கல்களுடன்
முடங்கினேன்-ஒரு
மூலையில்.
காலமும் அப்படியா என்ன?
*வீணான காகிதமாய் நீயும்,
விலையில்லா முதலாய் நானும்
இப்போது உன் மகனிடம்.
*பால் கொடுத்த நெஞ்சில்
விழுகிறது உதைகள்,
நீ அதை உணர்ந்தாய
உன் மரணப்படுக்கையில்?
*மௌனக்கன்நீர்
உன்னில்
ஆனால்
வலிக்கவில்லை எனக்கு.
காளை தாக்கிய உடம்பை
கன்று தாக்கினால்
வலிக்குமா என்ன?
*நார்க் கட்டிலில்
நாரோடு நாராய்
நாறியபடி நீ!
வார்த்தைகளால்
கீறிக் கொண்டிருக்கிறான்
உன் மகன்
உன்னைப் போலவே!
உணர்வாயா நீ?
*ஈட்டியால் எனைப் பிளந்தாலும்
வலியில்லை எனக்கு.
கணவா
உனைக் குறை கூற
சகிக்கவில்லை எனக்கு.
*விழித்தது என் பெண்மை.
எழு என் கணவா எழு
ஏறு போல் நடந்த என் கணவா
எழு.
முடியவில்லையா?
விழியில் நீரை வடித்து
நூலாய்க் கிடக்கும்
நீயா என்னவன்?
வா,
நான் சுமக்கிறேன்.
சிறு பெண் என்றா
நினைத்தாய்?
உன்னில் பாதி நான் தான்.
இப்போது
உன்னைச் சுமக்கும்
தூணும் நான் தான்.
அப்போதேனும் வடிப்பாயா?
ஒரு துளி கண்ணீர்
எனக்காகவென்று....?