வெற்றி யாருக்கு...??

கால் வைத்த தடமெலாம்
காலனாய் வழுக்கல்
காத்திருந்து சிதைத்து வாழ்வில்
காயத்தைத் தந்ததுவே ...

இருந்தும்...

விடாமுயற்சியே மேன்மையென
வீம்புடன் எழுப்பி மனதை
விரட்டிய அறிவு விரக்தியை
வீறு கொள்ளச் செய்ததுவே....

பின்னும்...

அயரா முயற்சி எலாம்
அணைந்து தவிடு பொடியாகி
அவலத்தைத் தந்தே
அதிர்ஷ்டம் மேலோங்கி வென்றதுவே....

அறிவீர்...

கிடைத்த வெற்றிக்
கிண்ணம் நொடிதோறும்
கிடந்து எடுத்த முயற்சிக்குக்
கிட்டியதல்ல அதிர்ஷ்டத்திற்கே...

என்று மனது
ஆணித்தரமாய் பகர்ந்ததை
அறிந்த அறிவு
தான் வழிகாட்டிய விடாமுயற்சியே
வெற்றிக் கனி பறித்ததென
வாதிட்டு மனதை கவிழ்க்க நினைத்ததுவே...

காணீர்...

கிட்டிய வெற்றி அறிவு காட்டிய முயற்சியாலா...
அன்றி மனம் சொலும் அதிர்ஷ்டத்தாலா...
அறிவு வென்றதா...மனம் வென்றதா...
யாராய் இருந்தாலென்ன...
கிட்டிய வெற்றியால் விளைந்த
மகிழ்ச்சி மனதிற்குத்தான்...
எனினும்
மனதை மகிழ்வித்த உயர்
பெருமைமிகு தலைநிமிர்வு
அறிவுக்குத் தான்...!!

---- நாகினி

எழுதியவர் : நாகினி (21-Aug-13, 1:18 pm)
பார்வை : 161

மேலே