முப்பொழுதும் உன்கற்பனையில்

வேடனாக
பேச்சைப் பொறியாக்கி
பார்வையை வலையாக்கி
சிறு புன்னகையில்
சிறைப் பிடித்தாய் ...!!

கள்வனாக
கனவுக்குள் நுழைந்து
உள்ளத்தில் ஊஞ்சலாடி
இதயத்தைக் களவாடினாய் ...!!

நண்பனாக
நாளும் நகையாடி
அன்பில் அரவணைத்து
ஆட்கொண்டாய் ஆழ்மனதை ...!!

காதலனாகினாய்
தூக்கத்தை துறந்தேன்
வண்ணக் கனவுகளில் தினமும்
வாழ்ந்தேன் உன்னோடு ...!!

எதிரியாக
எனை நீங்கினாய்
இதயம் இடம்பெயர்ந்த சேதி
உன்னிடம் சொன்னதும் ...!!

கவிஞனாக
இன்று என்னுள் நுழைந்து
கற்பனையை எழுத்தாக்கி
கவி பாடவைத்தாய் ...!!

மன்னவனே
மதி வருவதற்குள்
மாலையிட நீ வருவாயென
முப்பொழுதும் உன்கற்பனையில் நான் ...!!

எழுதியவர் : சுதா (23-Aug-13, 11:33 am)
சேர்த்தது : சுதா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 1682

மேலே