மதுவும் மனிதனும்
'இறந்த மனிதனை எரிப்பது தான் வழக்கம்
வாழும் மனிதன் எரிவது என்ன பழக்கம் '
என்ற பொன்மொழிக்கேற்ப மனிதன் இறப்பது என்பது இயற்கையாக அமைய வேண்டும். ஆனால் இன்று மனிதன் பல்வேறான தீய பழக்கத்தின் காரணமாக தன்னைத் தானே அழித்துக் கொள்வது மட்டுமின்றி அவனைச் சேர்ந்தவர்களையும், சமூகத்தையும் அழித்து வருகிறான்.
'நம்முடன் வாழ்வோரை புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்' என்பார்கள். இன்று பலர் தன்னை யாருமே புரிந்து கொள்வதில்லை என்ற தர்க்கங்களுடன் தான் செய்யும் தவறுகளை தன்னைச் சார்ந்தவர்கள் மீது சுமத்திக் கொண்டுள்ளனர். அவ்வாறு செயல்படும் மனிதர்கள் முதலாவது தெரிவு செய்யும் தீய பழக்கம் குடிப்பழக்கமும் புகைப் பழக்கமும் தான். இன்று அனேக குடும்பங்களையும், பெண்களையும், சமூகத்தையும் சீரழிப்பதில் முன்னோடியில் நிற்பது குடிப்பழக்கமே.
குடி குடியைய் கெடுக்கும்
' சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களை சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப் போகுமளவும் குடித்துக் கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ! ' என புனித பைபிள் கூறுகிறது.
'ஏன் குடிக்கிறோம்' என்று தெரியாமலே குடிப்பவர்கள் தான் இன்று அதிகம். 'வற்புறுத்திக் குடிக்கச் சொன்னாங்கடா' என்று ஆரம்பித்து பின்பு டென்ஷனா இருக்கும் பொழுதும், ஜாலிக்காகவும் என்று தொடர்ந்து தினக் குடிகாரர்களாக மாறி வாழ்க்கையை முடிக்கின்றனர்.
குடிப்பவர்களால் முதலில் பாதிக்கப்படுவது குடும்பமே. முன்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்பு தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாய் மாறினார்கள். தற்பொழுது பள்ளி செல்லும் வயதிலே டாஸ்மாக் செல்கின்றனர். குடியினால் முதலில் பாதிக்கப்படுவது மனம் தான். ஒரு மனிதனின் மனம் பாதிக்கபட்டால் மானம் போகும், மானம் போனால் எல்லாம் போய் விடும் என்பார்கள். இன்று அப்படித் தான்; மட்டுமின்றி அவர்கள் குடும்ப மானமும் போகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இன்று எத்தனை குடும்பங்கள் குடிகார கணவர்களாலும், குடிகாரப் பிள்ளைகளாலும் தங்கள் தூக்கத்தை தொலைத்து துக்கத்தில் மாளுகின்றனர் என்பது விவரிக்க முடியாத விஷயம். குடிப்பதினால் குடிகாரர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் எல்லோரும் அறிவர். ஆனால் குடிப்பவர்களுடன் குடும்பம் நடத்தும் பெண்களுக்கு உடல் அளவிலும் மன அளவிலும் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகம். மதுவை முகர்ந்து பார்க்கும் பொழுது வரும் துர்நாற்றத்தையே நம்மால் சகித்துக் கொள்ள முடியாது. அப்படியிருக்க தினம் தினம் மது நாற்றத்துடன் தன்னை நெருங்கும் கணவனை சகித்துக் கொள்வது என்பது எவ்வளவு கொடுமை.
'நடத்தையில் சந்தேகம்... மனைவி கொலை.... கணவன் கைது...' என்று நாளிதழ்களில் தவறாமல் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. மருத்துவத் துறையில் PROVOKES THE DESIRE BUT TAKES AWAY THE PERFORMANCE என்பார்கள். அதாவது காமத்தைத் தூண்டி விடும்; ஆனால் செயல்படுத்த விடாது என்று பொருள், அப்படித்தான் குடிப்பவர்களின் நிலையும். குடிப்பவர்களில் பலர் ஆண்மைக்குறைவு பிரச்சனையில் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகின்றனர். ஆனால் அவற்றை மறைப்பதற்கு தன் மனைவிகளின் மீது சந்தேகப் பார்வையும், வீண் வார்த்தைகளையும் வீசுகின்றனர். இதன் விளைவோ நேர் எதிராக காணப்படுகிறது. நம்பிக்கை குறையும் போது மனிதன் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான் என்பது இதில் புதைந்துள்ள உண்மை.
சரி குடி, குடிப்பவரின் மனதிற்கு அமைதியைத் தந்திருக்கிறதா என்றால், 'இல்லை' என்பது தான் குடிப்பவர்களின் மனம் அளிக்கும் பதிலாகும். குடி என்பது ஒரு விதமான கிளர்ச்சியை மட்டுமே ஏற்படுத்துவது. மதுவிலுள்ள அணுக்கள் எளிதாக நொதிகளின் உதவியுடன் செரித்து நேரடியாக இரத்தத்தில் கலந்து உடனடியாக போதையை ஏற்படுத்துகிறது. இரத்தத்தில் 20 – 30 மி.கி ஆல்கஹால் இருக்கும் போதே சிந்தனை, புரிந்துணர்வு, பார்க்கும் திறன் குறையும். அது 50 மி.கி- ஆக கூடும் பொழுது வார்த்தை குளறுதல், நடை தள்ளாட்டம், குழப்பம் என்ற நிலையை அடைகின்றனர். இந்த நிலையில் தான் தன் தாய்க்கும், தாரத்திற்கும் வித்தியாசம் தெரியாத வெறியனாக மாறுகின்றான். குடி வெறிபிடித்து ரோட்டில் அலையும் இந்த மிருகங்களால் தான் ஒன்றும் அறியா பல பெண்கள் பலியாகியுள்ளனர் என்பது காலம் காலமாக நடைபெறும் உண்மை. நவீன உலகமயமாக்களில் வாகனம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் வீட்டிலிருந்து கிளம்பினால் மீண்டும் வீட்டிற்கு வந்தால் தான் நி;ச்சயம். ஏனென்றால், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வாகன விபத்துக்கள். பெரும்பாலான வாகன விபத்துக்கள் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் தான் என்று கணக்கெடுப்பு ஆய்வுகள் கூறுகிறது. இன்று இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏனென்று ஆய்வு செய்தால் அவர்களின் கணவர்கள் குடியினால் இறந்தவர்களும், விபத்தினால் இறந்தவர்களின் சதவீதமே மேலோங்கி நிற்கிறது. குடிக்கு அடிமையாகியுள்ளவனுக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகி விடுவான் என்று குடியை மறைத்து இன்னும் பல பழைமைவாதிகள் ஒன்றும் அறியா பெண்களைத் தெரிந்தே படுகுழியில் தள்ளுகின்றனர். எதிர்கால வாழ்க்கையை கனவுகளோடு எதிர்நோக்கியுள்ள மங்கையை மாட்டி விடுகின்றனர் குடிகாரனிடம். அந்தபெண்களின் கனவுகள் சிதைகின்றன, கணவனின் கருமாதி வரையிலும். தெருவில் விழுந்து கிடக்கும் அவனைத் தூக்கி வரவும், பிறர் அவனை அடிக்க வரையில் பாதுகாக்கவும், வாழ்க்கை ஆடி முடிந்த பின் அவனை சுத்தப்படுத்தியே அவளின் வாழ்க்கை முடிந்து விடுகிறது. இதில் 'உன் தலைவிதி' என்று அந்தப் பழைமைவாதிகளின் இரக்கம் வேறு! யாருக்கு வேண்டும் இந்த இரக்கம்? எத்தனை பெண்களை மொட்டிலே அழித்திருக்கிறோம், குடிகாரர்களுக்காக வழக்கிடுபவர்களே ஒரு விசை யோசியுங்கள்!. இதில் சுவாரஸ்யம் என்னவெனில் ஆண்களுக்குப் பெண்கள் சலைத்தவர்களோ என்று பெண்களும் தங்கள் கடமைக்கு குடித்துக் குடியைக் கெடுக்கிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை!
இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு குற்றங்களும், பாலியல் வன்முறைகளும், சாலை விபத்துகளும், விவாகரத்துக்களும், சந்தேகக் கொலைகளும் பெருகி வருவதற்கு மிகப் பெரிய காரணம் குடி தான். இந்தியாவில் 80மூ குற்றங்கள் குடியினாலேயே என்பது உலகறிந்த உண்மை.
' ஐயோ! யாருக்க வேதனை? யாருக்கு துக்கம்? யாருக்கு சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்கு காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங் கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி தரிப்பவர்களுக்கும், கலப்பள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந் தானே' என்று புனித பைபிள் கூறுகிறது.
' அடிக்கடி தவறு செய்கிறவன் பாவி, ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன், தன்னையறியாமல் தவறு செய்து, தன்னை அறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன் '
மனிதர்களாய் வாழ்வோம்!
By
ஜேம்ஸ்G.மலைச்சாமி B.Sc.,MSW