காற்றைத் தேடி
தொட முடியாத இடங்களையும்
தொட்டு வருகிறது.
மரங்கள் கட்டியிருக்கும்
சங்கீத சலங்கைகலாம் இலைகளை
குலுக்கி உருட்டும் நட்டுவனராகி .
மழைத்தாரைகள்
மண்ணில் பதியம் செய்ய
கால் கொண்டு வருகிறது.
ஐந்தில் ஒன்றுதான்....
எடுத்துகொள்கிறது
எல்லா பக்கங்களிலும்
முக்கிய இடத்தை..
கோட்டைக்கும்..குடிசைக்கும்
பொதுவாகத்தான்
பயணம் செய்கிறது..
சில்லறை சேர்க்கும்
மனிதனையும்
கல்லறைக்கு அனுப்ப
வெளி நடப்பும் செய்கிறது.
உயிர்கோப்பையின்
உற்ச்சாகத் துள்ளலுக்கும்
உறிஞ்சப்பட்ட காலி கோப்பையை
உலர்த்தி போடுவதும்...
கண்ணுக்குத் தெரிந்த காரணியாகிறது .
கடவுளைப்போலத்தான்
காற்றும்..
கண்ணுக்குத் தெரியாமல்தான் இருக்கிறது.
விடுவதில்லை
இந்த விவஸ்தைக் கெட்ட மனிதர்கள் !
தனக்காக வெட்டிக் கொள்ளும் சவக் குழிகளாக
காற்றையும் மாசுப் படுத்துகிறார்கள் !
வெட்டப் படும்போதெல்லாம்
விரக்தியாய் மரங்கள் சொல்லிக் கொள்கிறது..
இன்று சோற்றைத் தேடி அலையும் மனிதன்
நாளை..
காற்றைத் தேடி அலைவான்..