தாத்தாவின் மணம்

அப்படி என்ன இருக்கிறது
அந்த மூடிய இருண்ட அறையில்,
துணை தேடித் தவிக்கும்
வாலறுந்த ஒற்றைப் பல்லி.
இன்றளவும் கனவுகளோடு வாழும்
கம்பிகளற்ற தம்பூரா.
தூசிப்படலத்தில் புள்ளிக் கோலம் வரையும்
குருட்டுச் சிலந்தி.
அவற்றுடன் மொத்த நிகழ்விற்கும்
ஒரே சாட்சியாக மணம் வீசும்
இறந்து போன தாத்தாவின்
செல்லறித்த நாட்குறிப்பு.