அறிவுச் சுடரேற்றும் ஆசான்....

எண்ணும் எழுத்தும் அறிவினில் ஊட்டி
என்னையும் உன்னையும்ஆக்குவித்தவன்
நல்லன உள்ளன வாழ்வின் செயல்கள்
அனைத்தும் அறிவாய் விதைத்த வித்தகன்

ஆகாயத்தின் விண்மீன் கோள்கள்
ஆழ்கடல் அலைகள் கடல் வாழ் இனங்கள்
உடற் கோட்பாடுகள் வேதியல் மாற்றங்கள்
அனைத்தும் குருவே உன்னால் அறிந்தோம்

திரைகடலோடியும் திரவியம் தேடவும்
திறம்படக் கல்வி உரமதுவாகவும்
பலவித துறையில் வித்தகர் பலவென
உயி(ய)ர் சிலை வடிக்கும் சிற்பியும் ஆசான்

மெல்லிய புன்னகை முகத்தினில் ஏந்தி
அறிவூட்டிடும் தருணம் இனிமை கூட்டி
மாணவரிடத்தில் அறிவினை ஏற்றும்
சூரியச் சுடராம் பேரொளி ஆசான்

வகுப்பறை பாடம் தொய்வுறும் நேரம்
பாடம் விலக்கியும் கலகலப்பூட்டியும்
நல் கருத்தினை படிப்போர் மனதில் ஏற்றியும்
கற்பிக்கும் ஆசான் தோழனே ஆவார்

சூரியன் நிலவு இயற்கையின் படைப்பு
சுடர்விடும் அறிவு நல்லாசான் பதிப்பு
ஆசான் அறிவுரை ஏற்பவர் வாழ்வில்
ஏற்றம் கண்டே வாழ்வார் உலகில்!!!!

நேற்றைய இன்றைய உலகின் அறிஞர்
யாவரும் ஆசான் ஊட்டிய கல்வி
நவீனம் புதுமை அனைத்தின் மூலம்
அமைந்தது எல்லாம் ஆசிரியர் மூலம்

வாழ்விற்கடித்தளம் அமைத்திடும் நல்ல
கல்விச் சாலைகள் யாவும் கோவில்களாகும்
இன்மொழி பேச்சில் நன்னெறிப் படுத்தும்
ஆசான் யாவரும் தெய்வங்கள் ஆவர்

மனதினில் நிறுத்தி மதிப்போம் அவரை
கரங்கள் குவித்தே தொழுவோம் தினமும்
பார்வைக்கு தெரியும் கடவுள் குருவை
சிரம் தாழ்த்தி வணங்குதல் நாளும் தகுமே..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும்
என் வணக்கத்துடனான ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

எழுதியவர் : சொ. சாந்தி (5-Sep-13, 8:59 am)
பார்வை : 181

மேலே