ச்ச்சும்மா...!

எப்டி எப்டியோ ஓடிட்டு இருக்குற வாழ்க்கைல நகைச்சுவைன்ற ஒரு உணர்வு இல்லேன்னா... ரொம்ப போர் ஆயிடும் இல்லையா? சீரியஸா திங்க் பண்றதுக்கும் நல்ல நகைச்சுவை உணர்வு அவசியமாத்தான் இருக்கு. அது எப்டினு கேக்குறீங்களா...

எப்பவுமே ஒரு விசயம் அதிகமாகும் போது அதற்கு நேர் எதிரான நினைவுகள் ரொம்ப ஸ்ட்ராங் ஆகும். ரொம்ப சீரியசாவே இருக்கவங்கள பாத்தா காமெடியா இருக்கும் அது வேற கதை...? அப்போ அவுங்க எல்லாம் ரொம்ப நகைச்சுவை உணர்வு மேலானவர்களான்னு ஒரு கேள்வி வருதா... இந்த இடத்துல ஒரு ஸ்டாப் கொடுங்க....

சாரி அப்டி இருக்க முடியாதுங்க ஏன் தெரியுமா?

இளகுவா இருக்குற இடத்துலதான் என்ன வேணா வரும்.. ! இறுகிப்போன நிலத்துல..? ம்ம்ஹூம் ஒண்ணுமே வராது.. ! எப்டி லாஜிக் ஒத்து வருதா? சரி ஏதோ பேச வந்து எங்கயோ போறது என்னோட பிரச்சினைதான் நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க கொஞ்சம்....

நான் 9வது படிச்சப்போ ஒரு தமிழ் ஆசிரியர் இருந்தாங்க.....இருங்க....இருங்க பேரு நினைவுக்கு வரலை...ம்ம்ம்ம்ம் பட்டுக்கோட்டை பாய்ஸ் ஹை ஸ்கூல் தான்.. ம்ம்ம்.. யெஸ்.. நாகரத்தினம் சார்! எப்டி தெரியுமா கிளாஸ் நடத்துவாங்க.. ச்சும்மா சிரிச்சுட்டே இருப்போம்...ஆமாம். தமிழ் இலக்கணம் அவுங்ககிட்ட இருந்துதான் புரிதலோட கத்துகிட்டேன். இந்த நேர்கூற்று, அயற்கூற்று, மாத்திரை கணக்கீடு, அணி இலக்கணம், பா வகைகள்... ச்சும்மா சொல்லக்கூடாது.. அவர்தான் தமிழ் விதையை எனக்குள் விதைத்த பிதாமகர். எங்க இருக்காங்கனு தெரியலை.. ஸ்டில்.. நமஸ்காரங்கள் சார்!

நாகரத்தினம் சார் சொன்ன ஒரு ஜோக் இப்ப உங்ககிட்ட ஷேர் பண்றேன்.

அதாவது எல்லா பள்ளிக்கூடத்துக்கும் இன்ஸ்பெக்சன் வருவாங்கல்ல அது மாதிரி ஒரு ஏரியாவுல இன்ஸ்பெக்டர் செக்கிங் போறது கேள்வி பட்டு பள்ளிக்கூடத்து 8 ஆம் வகுப்பு ஆசிரியருக்கு செம டென்சன். டென்சனுக்கு காரணம் நம்ம முனியன்.

முனியன் கிட்ட போய் நீங்க பச்சை மிளகாய் என்ன கலர்னு கேளுங்களேன்.. ஒரு க்ளு கொடுங்க சார்னு உங்களையே திரும்ப கேப்பான். அப்படிப்பட்ட முனியன் கிட்ட இன்ஸ்பெக்டர் வந்து கேள்வி கேட்டு சொல்லத் தெரியாம முழிச்சா அப்புறம் ஸ்கூல் மானம் போறத விட கிளாஸ் வாத்தியார் பேரு போய்டுமே.. எவ்ளோ சொல்லிக் கொடுத்தாலும் முனியன் ரொம்ப டஃப் கொடுத்தான் சாருக்கு.. .

சரின்னுட்டு... என்ன கேள்வி காமனா எல்லா ஸ்கூல்லயும் கேக்குறார் இன்ஸ்பெக்டர்னு விசாரிச்சு பாத்திருக்கார் நம்ம சார். அப்டி விசாரிச்சதுல " பூமியின் வடிவம் என்ன? " அப்டீன்ற கேள்விய காமனா கேக்குறதா கண்டுபுடுச்ச வாத்தியார்,

முனியனை கூப்பிட்டு ப்ராக்டிஸ் கொடுக்க ஆரம்பிச்சார்... பூமியின் வடிவம் என்ன? முனியான்னு கேட்டு உருண்டைன்னு அன்னிக்கு புல்லா (நல்லா கவனிங்க அப்டி சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கும் போது திங்கட் கிழமை....) சொல்லி கொடுத்து ஓராயிரம் தடவைக்கு பின்னாலும் முனியன் திரு திருன்னு முழிக்கிறத நிறுத்தவே இல்லை......

நம்ம சாரும் யோசிச்சு யோசிச்சு.. ஃபைனலா ஒரு முடிவு எடுத்தாரு.. அதாவது சாருக்கு மூக்கு பொடி போடுற பழக்கம் இருக்கு...சோ அவர் ஒரு உருண்டையான குடுவைல பொடிய போட்டு வச்சி இருப்பாரு.. அதுதான் அவர் பொடி டப்பா... ! முனியன் கிட்ட பூமியின் வடிவம் என்னனு கேட்டுட்டு.. டக்குனு பொடி டப்பாவை ஞாபகத்துக்காக காட்டி சொல்லிக் கொடுத்து இருக்காரு.. பையனும் நெருப்பு மாதிரி பிடிச்சுகிட்டான்.. சாருக்கும் சந்தோசம்....

செவ்வாய்கிழமை - கிளாஸ்குள்ள நுழைஞ்ச உடனே.. சார் கேட்டு இருக்காரு.. "ஏய் முனியா பூமியின் வடிவம் என்ன? (அட பொடி டப்பாவா கைல எடுத்து காட்டிகிட்டுதாங்க...) ........." முனியன் பளீச்னு சொல்லியிருக்கான்.. "உருண்டை சார்" ! நம்மா சாருக்கு செம சந்தோசம்...

புதன் கிழமை - " ஏய் முனியா பூமியின் வடிவம் என்ன" சார் பொடி டப்பாவை காண்பித்து கேக்க.. முனியனும் டக்குனு உருண்டை சார்.னு சொல்லிட்டான்.. !

வியாழக்கிழமை - ஏய் முனியா.....பூமியின் வடிவம்.....ம்ம்ம்ம்?????? உருண்டை சார்.. செம ஸ்பீடா பதில் முனியன் கிட்ட இருந்து (அட மூக்கு பொடி டப்பாவ பாத்துதாங்க.. ரொம்ப நம்பீடாதீங்க அவன் நம்ம முனியன்...). வியாழக்கிழமை ஈவ்னிங் ஸ்கூலுக்கு இன்பர்மேசன் வந்துடுச்சு.. அடுத்த நாள் .. இன்ஸ்பெக்டர் வர்றார்னு......அதாவது வெள்ளிக்கிழமை...

வெள்ளிக்கிழமை - நம்ம சார்க்கு செம டென்சன் இன்ஸ்பெக்டர் வருவாரு கேள்வி கேப்பாரு, நேரத்துக்கு ஸ்கூல் போகணும்னு அடிச்சு பிடிச்சு.. ஸ்கூல்க்கு வந்தாரு.. கொஞ்சம் லேட் வேற ஆச்சு...! நல்ல வேளை இவர் கிளாசுக்கு இன்னும் இன்ஸ்பெக்டர் வரலை....

ஆனா சார் போன பத்து நிமிசத்துல வந்துட்டாரு...இன்ஸ்பெக்டர்...! சரி அடுத்து நாம எல்லோரும் எதிர்பார்த்த படி...இன்ஸ்பெக்டர் கரெக்டா முனியனை எழுப்பி (அவனத்தான எழுப்பணும் அதுக்கு தானே முனியன் கேரக்டர ஸ்டார்டிங்கல் இருந்து ஃப்ளாஷ் பண்றோம்.. ஹி ஹி ஹி சேம் டமில் சினிமா ஸ்டைல்) கேள்வி கேட்டாரு...

பூமியின் வடிவம் என்ன தம்பி?னு கேட்டார் இன்ஸ்பெக்டர்.... முனியன் சார பாக்குறான்.. சார் டக்குனு மூக்கு பொடி டப்பா எடுத்து காட்ட.......முனியன் பதில் சொல்ல ஆரம்பிச்சான்...

"திங்கட்கிழமை, செவ்வாய்கிழமை, புதன் கிழமை, வியாழக்கிழமை பூமி உருண்டை சார்.....அப்புறம் வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை சப்பட்டையா போய்டும் சார்னு"

நம்ம சார் என்ன பண்ணி இருக்காரு இன்ஸ்பெக்டர் வர்ற அவசரத்துல.. நார்மல் பொடி டப்பாவை வீட்ல மறந்து வச்சிட்டு வர்ற வழில அவசரமா பொடிய வாங்கி வாழைப்பட்டைல கட்டிட்டு வந்துட்டார். அதை முனியன் கிட்ட பழக்க தோசத்துல காட்டிட்டார்....! நம்ம புத்திசாலி முனியனும் ப்ராப்ரரா ஆன்சர் பண்ணிட்டான்.....ஹா.. ஹா ஹா... ஆனா அது கூட இல்லை மேட்டர்..இன்ஸ்பெக்ட்டர் ஆச்சர்யமா முனியன பாத்து சிரிச்சுட்டே கேட்டார்...

" ஏன் தம்பி.... சனி, ஞாயிறு அன்னிக்கு உன் பூமி என்ன ஆவும் தம்பின்னு" கேட்டவுடனே முனியனுக்கு வந்துச்சு பாருங்க கோவம்......

"சார் உங்களுகு ரொம்பத் தெரியுமோ....சனி ஞாயிறு ஏது சார் பூமி? அன்னிக்கு லீவு சார்.......நீங்க எல்லாம் ஒரு இன்ஸ்பெக்டருன்னு" ரொம்பவே டென்சனாயிட்டான் முனியன்.....

அப்புறம்.. முனியனுக்கும், அந்த கிளாஸ் சாருக்கும் என்ன நடந்து இருக்கும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.. ஹா ஹா...ஹா!

சில நேரத்துல நாம சீரியசா இருப்போம்......சூழ்நிலை காமெடியா போய்டும்...! அப்புறமா யோசிச்சு யோசிச்சு சிரிப்போம். நான் எங்க அப்பத்தாவ பாக்க எங்க கிராமத்துக்கு போயிருந்தேன்.. அப்போ நான் ஸ்டார் ஹோட்டல்ல ப்ரண்ட் ஆபிஸ் மேனேஜரா சென்னைல வொர்க் பண்ணிட்டு இருந்தேன்...

அப்பத்தாவும் நானும் வீட்டு வாசல்ல உக்காந்து பேசிட்டு இருந்தோம். அப்ப பில்லப்பன் அப்டின்னு ஒரு அண்ணன் எங்கள கிராஸ் பண்ணி போனாங்க.. போனவரு சும்மா போலம்லயா...? கையில இருந்த மாட்டை மரத்துல கட்டிட்டு.. எங்க கிட்ட வந்து "ஆரு இது சுப்பையா மயனா? எப்ப வந்தீகன்னு" கேக்க.. நான் காலைல வந்தேன் அண்ணேன்னு சொல்லி நலம் விசாரிச்சுகிட்டோம்...

அப்ப பில்லப்பன் அண்ணன் எங்க அப்பத்தா கிட்ட கேட்டாரு...தம்பி சோலி (வேலைதான்) ஏதும் பாக்குதா இல்லை சும்மா இருக்கானு கேட்க.. எங்க அப்பத்தா பெருமையா சொன்னிச்சு.. அட அவன் களப்பு கடையில இருக்கான்டா (ஹோட்டலை கிளப் கடைன்னு சொல்லுவாங்க அதை வழக்கில் களப்பு கடைன்னு திரிஞ்சும் சொல்லுவாங்க..நம்ம ஊரு புரோட்டா போடுற டீக்கடைதான்ப்பு...அவ்வ்வ்வ்வ்வ்)சொன்னிச்சி...! சரி அப்பத்தா ஏதோ சொல்லுது சொல்லிட்டு போகட்டும்னு நானும் விட்டுட்டேன்....

பில்லப்பன் அண்ணன் திருப்பிகிட்டு கேட்டாரு..."ஏத்தா களப்பு கடையில என்னா வேலை.பாக்குது? பில்லு போடுற வேலையான்னு...." நான் கொஞ்சம் டென்சனாகி ... "அண்ணே அது ஹோட்டல்னே.. ஆளுப்பேருக தங்குவாக, நான் பில்லு எல்லாம் போட மாட்டேன்ன்னு' கொஞ்சம் சூடாவே சொல்லிட்டேன்...

"ரூம்பு எல்லாம் இருக்குமா? சரி சரி வாடகைக்கு விடுவாய்களே அதானேன்னு.. சொன்னவரு பேசாம போயிருக்கலாம்...ஆன போகலை எங்க அப்பத்தாகிட்ட போயி ரொம்ப சோகமா சொன்னாரு....

" ஏத்தா.... இம்புட்டு காசு போட்டு சுப்பையா படிக்க வச்சானே மயனை....போயிம் போயிம் களப்பு கடையிலயா வேலபாக்கணும்....அதுவும் மெட்ராசுல போயி.....இங்கனாதான் சிவங்ஙேலதானா (சிவகங்கை) எங்குட்டாச்சும் நல்லா கடை நாடி(பக்கம்) சேந்துருக்கலாம்ல....என்னமோத்தா.. இந்தக்காலத்துல புள்ளக்குட்டியள காசக் கொட்டி படிக்க வச்சா படிக்கவா செய்யுதுக்கன்னு ' சொல்லிட்டு என் மேல கோவமா சொல்லிக்காம கொள்ளாம மாட்ட பத்திட்டு போய்ட்டாரு...

எங்கப்பத்தாக்கு நான் சொல்லி தேத்தி புரிய வைக்க பட்டபாடு....என் செம்மம் (ஜென்மம்) முத்தியடஞ்சு போச்சுடா சாமி....!

என் பிரச்சினையே இதான் பேசுனா பேசிட்டே இருப்பேன்....ஹா ஹா ஹா.. நேரமாச்சு...கிளம்புறேன்.....!

அப்போ வர்ர்ர்ர்ட்டா....!

எழுதியவர் : Dheva.S (5-Sep-13, 9:20 am)
பார்வை : 160

மேலே