மலரும் நினைவுகள்

என்னுடைய இளமைக்கால வாழ்க்கையில் 1995 - 1996 ம் வருடங்கள் என் சிந்தனையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய வருடங்கள்.1995 ம் வருடத்தில் என் மனம் கவர்ந்த தமிழ் சினிமா இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் உருவான 'பாட்ஷா' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டி ருந்தது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பிரமிக்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தி யிருப்பார். நான் அப்போது கோவில்பட்டியிலுள்ள நாடார் மேல்நிலைப்பள்ளியில் 9 ம் வகுப்பு படித்துக் கொண்டிருந் தேன்.பம்பாய் மாநகரில் கடத்தல் மன்னனாகவும்,அங்கே உள்ள தமிழர் பகுதி வாழும் மக்களுக்கு நன்மை செய்பவராகவும்,பிரமிக்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

நான் ஒரு தடவை சொன்னா,நூறு தடவை சொன்ன
மாதிரி என்று ரஜினிகாந்த் படத்தில் பேசும் வசனம் அன்றைய தினங்களில் இளைஞர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.படம் வெளியாகி ஒரு
வருடத்தையும் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.1996 ம் வருட தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக,1992 ம் வருடம் சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் வெளியான அண்ணாமலை திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

இந்த காலகட்டங்களில் 1995 ம் வருட இறுதியில், தென்காசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற
கழகத்தின் மாபெரும் பொதுக்கூட்டம் 'வைகோ' அவர்களின் தலைமையில் நடைபெற இருந்தது. அப்போது நமது கிராமத்திலிருந்து மதிமுக சார்பில் குருவிகுளம் யூனியன் மாவட்டக் கவுன்சிலராக விஸ்வாமித்திரன் மாமா அவர்கள் பதவி வகித்தார்கள்.தென்காசியில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு வாகனங்களை ஏற்பாடு செய்து,சுமார் 50 பேருக்கும் மேற்பட்டோர் நமது கிராமத்திலிருந்து சென்றோம்.எந்த ஒரு அரசியல் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கும் விஸ்வாமித்திரன் மாமா அவர்கள் தொண்டர்களை அழைத்துச் செல்லும்போது, மதுபானத்தை வாங்கி கொடுக்கவே மாட்டார். தமிழக அரசியலில் பதவிகளை வகிப்பவர்கள் எந்த ஒரு காலத்திலும்,குறிப்பாக நமது தமிழ்நாட்டு மக்களை நூற்றாண்டுகளுக்கும் திருப்திபடுத்தவே முடியாது. அரசியல் ரீதியாக மக்கள் விமர்சனங்களை செய்தாலும்,கிராமத்தின் தனித்துவமான மனிதர் விஸ்வாமித்திரன் மாமா அவர்கள்.

நமது கிராமத்திலிருந்து தென்காசியில் நடைபெறும் மாநாட்டிற்கு சரியாக 11 மணிக்கு கிளம்பி,நேராக குற்றாலத்திற்கு சென்றோம்.அங்கே ஒரு அருவியில் குளித்து விட்டு,தென்காசி நகருக்கு மாலை 5 மணிக்கெல்லாம் வந்து விட்டோம். தென்காசி நகரமெங்கும் மதிமுக கழகத்தின் கொடிகள்,தோரணங்கள்,ஆளுயர கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.எங்கு பார்த்தாலும் "தலைவா வாழ்க","கலிங்கத்துச் சிங்கம் வாழ்க" என்று விண்ணகமே அதிரும் அளவுக்கு தொண்டர்களின் கோசங்கள்.லட்சக்கணக்காண தொண்டர்கள் தென்காசி நகரையே திக்குமுக்காட வைத்தார்கள். வாட்ட சாட்டமான இளைஞர் ஒருவர்-சவாலா!சவாலா!வைகோவுக்கே சவாலா! என்று சொல்லி ஆடிக்கொண்டே சென்றார்.எனது தந்தையார் உடன் வந்திருந்தார்.தந்தையார் என்னிடம் சொன்னார்-ஒரு பாமரனோட நாடி,நரம்பு,ரத்தத்துல ஊறி இருக்குற அரசியல் உணர்வை தட்டி எழுப்புற ஆன்மசக்தி,லட்சத்துல ஒருத்தருகிட்டதாண்ட இருக்கும்.அந்த சக்தி வைகோகிட்ட இருக்கு.அதனாலதான் அந்தப் பையன், அப்படி ஒரு வசனம் பேசிகிட்டு,ஆடிகிட்டே போறான் என்றார்.இதை எனது தந்தையார் சாதாரண வழக்குமொழியில் சொன்னார்.இப்படி லட்சக்கணக்கான அரசியல் கட்சிகளின் தொண்டர்களை ஒரே இடத்தில் பார்ப்பது அந்த சிறு வயதில் எனக்கு புதுமையான அனுபவமாக இருந்தது.ஒரு காவியத் தலைவனின் சிம்மக்குரலைக் கேட்பதற்காக,இவ்வளவு மனிதக் கூட்டங்களா என்று நினைத்து,அன்றைய தினம் பிரமித்துப் போனேன். என்னுடைய எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் வாழ்க்கையின் போக்கையே மாற்றிய தினமாக அன்று அமைந்துவிட்டது.

கழக மாநாடு மாலை 6 மணிக்கெல்லாம் ஆரம்பமாகியது.முண்ணனித் தலைவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.எனது தந்தையாரின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ஒருமணி நேரம்தான் தலைவர்களின் பேச்சைக் கேட்டேன்.பின்னர் தூக்கம் வருகிறது என்று சொல்லிவிட்டு எழுந்தேன்.எங்குமே நகரமுடியாத அளவுக்கு தொண்டர்கள் அமர்ந்திருந்தார்கள்.பிறகு என்ன செய்வதென்றுநினைத்து,நாற்காலியில் அமர்ந்தவாறே என் அப்பாவின் மடியிலேயே
தூங்கிவிட்டேன்.சரியாக இரவு 10 மணிக்கு 'வைகோ' அவர்கள் பேச ஆரம்பித்தபோது, தூங்கிகொண்டிருந்த என்னை தந்தையார் எழுப்பிவிட்டார்.சற்று எழுந்து விழித்துப் பார்த்தபொழுது,லட்சக்கணக்கான தொண்டர்களின்
ஆராவரத்தோடு,தன்னுடைய சிம்மக்குரலால் விண்ணகமே அதிரும் அளவுக்கு சங்கநாதம் செய்துகொண்டிருந்தார்.அவருடைய சிம்மக்குரல் என் இதயத்தில் மின்னலெனத் தாக்கியது.வைகோ அவர்களின் இலக்கிய மொழியின் சம்பாஷனை, ஆழ்ந்த அரசியல் அறிவு,வரலாற்று நிகழ்ச்சிகளின்
மாற்றங்கள்,அன்றைய தமிழக அரசியலின் கொந்தளிப்பான சூழலை பேசியதைக் கேட்டு பிரமித்துப் போனேன். இலக்கியம்,வரலாறு, கலாச்சார அறிவுகளைத் தேடி நான் என்னுடைய வாழ்க்கையில் பயணிப்பதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த தினமாக அன்று அமைந்தது.நான் படிக்கும் பள்ளியில் உள்ள நூலகத்தை தேடி தினந்தோறும் செல்ல ஆரம்பித்து, புகழ்பெற்ற மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளை படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.


இந்த மாநாடு 1996 ம் ஆண்டில் நடைபெற இருந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிரச்சார களமாக இருந்தது.1996 ம் வருட தமிழக அரசியலில் முக்கியமான திருப்புமுனைகள் நடைபெற்றது. ஜி.கே.மூப்பனார் தலைமையில் அமைந்த
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு 'சைக்கிள்' சின்னம்.அப்போது 1992 ம் ஆண்டில் வெளியாகி வெற்றிபெற்ற அண்ணாமலை திரைபடத்தில் வரும் பாடலான 'ரெக்கை கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்' என்ற பாடல் புகழ்பெற்றது.இந்த பாடல் சைக்கிள் சின்னத்திற்கு பொருத்தமாக அமைந்தது. திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணிக் கட்சியாக தமிழ்மாநில காங்கிரஸ் நின்றது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்போது இந்தக்கூட்டணிக்கு ஆதரவாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்ற வெளியிட்ட அறிக்கையை,தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டு பிரச்சாரம் நடைபெற்றது.

நமது கிராமத்தில் பெரும்பாலான இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.காலம் செய்த கோலம்,வைகோ அவர்கள் தனித்து போட்டியிடும் சூழல் ஏற்பட்டது.அன்றைய சட்டமன்ற தேர்தலில் மதிமுக கழகம் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி இருக்கக்கூடிய சூழலில்,ரஜினிகாந்த் என்ற மாபெரும் சக்தியின் அறிக்கையால் வாக்குகளை சிதற அடித்து,மதிமுக கழகத்தை சட்டமன்ற தேர்தலில் தோல்வியடையச் செய்தது.அப்போது சிறுவயதாக இருந்த எனக்கு அரசியல் குறித்து அவ்வளவாக தெரியாது என்பதால்,இந்தத் தோல்வியின் பாதிப்பு குறித்து எனக்கு ஒன்றும் அவ்வளவாகத் தெரியவில்லை.

இந்திய அரசியலில் தன்னிகரில்லாத மனிதரான "வைகோ" அவர்கள் இந்திய நாட்டை தவிர்த்து,வேறு நாட்டில் பிறந்திருந்தால் இரண்டு முறை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று,உலகம் போற்றும் தலைவராக உயர்ந்திருப்பார். அறிவுள்ள,தியாகசீலமுள்ள,நேர்மையான,ஒழுக்கமான,அப்பழுக்கற்ற மனிதர்களை புரிந்து கொள்ளாத,தமிழ்நாட்டின் மண்ணில் ஜனனம் செய்து,தன வாழ்நாள் முழுவதையுமே அரசியல் பணிக்காக தியாகம் செய்துவிட்டார்.தனிப்பட்ட காரணங்களுக்காக தொண்டர்கள் கழகம் மாறலாம். ஆனால் எல்லோராலும் அப்பழுக்கற்ற மனிதராக போற்றப்படக்கூடியவர் தமிழ்த்தாயின் தவப்புதல்வர் வை.கோபால்சாமி அவர்கள்.

My Village Blog:
kulakattakurichi

எழுதியவர் : R Senthilkumar (9-Sep-13, 12:47 pm)
பார்வை : 101

மேலே