" என் தங்கை கல்யாணம்"

வீதியெங்கும் வண்ணக்கோலம்,
வீடெங்கும் வாழைத்தோரணம்,
வானமெங்கும் வருணமேகம்,
வஞ்சியவள் மணக்கோலம்.

தோழியர்கள் படைசூழும்,
தோட்டமலர் மகிழ்ந்தாடும்,
தையலவள் கொள்வாள் நாணம்,
தங்கையவள் மணக்கோலம்.

பச்சைபட்டு சேலைபூட்டி,
பல வாச மலர் சூட்டி,
பாதக்கொலுசின் கீதம் கூட்டி,
பாவையின்று மணவாட்டி.

அன்னை தந்தை அகங்குளிரும்,
அண்ணன் செய்வான் ஆரவாரம்,
அத்தனை சொந்தம் இடஞ்சேரும்,
அத்தான் அவன் வரும் நேரம்.

வழியெங்கும் பந்தலிட்டேன்,
வருணமதை நிறுத்தி வைத்தேன்,
வாட்டும் வெயில் அடக்கி வைத்தேன்,
வண்ணத்தங்காள் மண்டபம் சேர.

சரம்சரமாய் மலர்க்கூடை,
சந்தனம் பன்னீர், கமழும் வாடை,
மங்கள மந்திர ஓசைகள் முழங்க
மங்கை ஏறினாள் திருமணமேடை.

சொந்தபந்தங்கள் வரவுகள் பெருக,
சொர்க்க நாதங்கள் வாசலில் ஒலிக்க,
செல்லத்தங்கையின் கைத்தலம் பற்றும்,
சீர்மிகு செல்வனே வருக வருக.

அத்தையும் மாமனும், ஆசையாய் பார்க்க,
சித்தியும் சித்தப்பனும், சிரித்தே நோக்க,
பாட்டனும் பாட்டியும், பக்கத்தில் நிற்க,
அழகு குழந்தைகள், அருகிலே சிரிக்க,
அக்காள் தங்கையர்,ஆவலில் நகைக்க,

சொந்த பந்தங்கள்,சிந்துகள் பாடிட
தோழர் தோழியர்,தோள் சேர்ந்து தாளமிட,
பெற்றோர் மனதில், பேரின்பம் கூத்தாட,
அமைந்திருக்கும் அனைவரும்,அட்சதை தூவிட,

கொட்டு மேளம்
எட்டி முழங்கிட,
கட்டும் தாலி
வைபோகம் நிகழ்ந்திடும்.

அந்த நிமிடம் முடியும் தருணம்,
அன்புத்தங்கையின் தலையும் நிமிரும்,
அண்ணன் கண்ணினை அவள்கண் நோக்கும்,
அப்பார்வையில் புரியும் ஆயிரம் பாசம்.

தங்கையே நீ வாழ்க, நீடூழி வாழ்க.

எழுதியவர் : ஈஸ்வரன் ராஜாமணி (10-Sep-13, 9:04 pm)
பார்வை : 3616

சிறந்த கவிதைகள்

மேலே