புறநானூறு பாடல் 109 – வேள் பாரி
வேள் பாரியிடம் மகட்கொடை வேண்டி மறுக்கப்பட்ட தமிழ் வேந்தர் அதுவே காரணமாக அவனிடம் பகைமை கொண்டனர். மூவேந்தரும் ஒருவர் ஒருவராக அவனோடு போருக்கு வந்து தோல்வியடைந்தனர். அது கண்ட கபிலர், ”தமிழ் வேந்தர்களே! பாரியுடைய பறம்பு மலை இரங்கத்தக்கது! பெருமை கொண்ட முரசினை யுடைய நீங்கள் மூவேந்தரும் சேர்ந்து முற்றுகை இட்டாலும் வேள்பாரியை வெல்வதும் பறம்பினைக் கைப்பற்றுவதும் அரிது.
உழவரால் உழுது விளைக்கப்படாத வேறு நான்கு பொருட்கள் விளையும் தன்மையுடையது பறம்பு மலை. அவற்றுள் முதலாவது சிறிய இலையை யுடைய மூங்கிலில் நெல் விளையும். இரண்டாவது, இனிய சுளைகளையுடைய பலாவின் பழங்கள் பழுத்து முதிர்ந்திருக்கும். மூன்றாவது, வளமான கொடியையுடைய வள்ளிக்கிழங்கு பூமியின் அடியில் விளைந்திருக்கும். நான்காவது, முதிர்ந்த நாட்பட்ட தேன் அழகிய நீல நிறமாக மாறுவதால் தேனடைகள் உடைந்து, மிகவும் அழிந்து கனத்த நெடிய மலை தேனைப் பொழியும். வானளவு உயர்ந்திருக்கும் அவனது பறம்பு மலை. அந்த வானத்திலுள்ள விண்மீன்களை ஒத்திருக்கும் அம்மலையிலுள்ள நீர்நிலைகள்.
அவ்விடத்தில் அந்த மலையில் மரங்கள் தோறும் கட்டப்பட்ட யானைகளை உடையீராயினும், இடமெல்லாம் பரவலாக நிறுத்தப்பட்ட தேர்களை உடையீராயினும், உங்கள் முயற்சியால் பறம்பு நாட்டைப் பெற முடியாது. உமது வாள் வலிமை யால் அவன் தரமாட்டான். நான் அறிவேன் அதனைக் கொள்ளும் வழி.
சுத்தி செய்து வடித்து, முறுக்கப்பட்ட நரம்பினை யுடைய சிறிய யாழைத் தயாரித்து மீட்டியபடி நறுமணமிக்க தழைத்த கூந்தலையுடைய உங்கள் மனைவியர் விறலியராகப் பின் வர, பரிசிலராக நீங்கள் ஆடிப் பாடியபடி சென்றால் பாரி உங்களுக்கு பறம்பு நாட்டையும், மலையையும் கூட ஒன்றாகத் தானம் செய்வான்” என்று இப்பாட்டில் கூறியுள்ளார்.
இனி பாடலைப் பார்ப்போம்.
அளிதோ தானே பாரியது பறம்பே
நளிகொண் முரசின் மூவிரு முற்றினும்
உழவ ருழாதன நான்குபய னுடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே 5
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே
நான்கே அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே
வான்க ணற்றவன் மலையே வானத்து
மீன்க ணற்றதன் சுனையே யாங்கு 10
மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும்
தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன்
யானறி குவனது கொள்ளு மாறே
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி 15
விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடுங் குன்று மொருங்கீ யும்மே.
பதவுரை:
அளிது பாரியது பறம்பு – இரங்கத்தக்கது பாரி யுடைய பறம்பு மலை
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும் – பெருமை கொண்ட முரசினையுடைய நீங்கள் மூவேந்தரும் சேர்ந்து முற்றுகை இட்டாலும்
உழவர் உழாதன நான்கு பயனுடைத்து – உழவரால் உழுது விளைக்கப்படாத வேறு நான்கு பொருட்கள் விளையும் தன்மையுடையது
ஒன்று, சிறியிலை வெதிரின் நெல் விளையும் – அவற்றுள் முதலாவது சிறிய இலையையுடைய மூங்கிலில் நெல் விளையும்
இரண்டு, தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும் – இரண்டாவது, இனிய சுளைகளையுடைய பலாவின் பழங்கள் பழுத்து முதிர்ந்திருக்கும்
மூன்று, கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும் – மூன்றாவது, வளமான கொடியையுடைய வள்ளிக் கிழங்கு பூமியின் அடியில் விளைந்திருக்கும்
நான்கு, அணி நிற ஓரி பாய்தலின் – நான்காவது, முதிர்ந்த நாட்பட்ட தேன் அழகிய நீல நிறமாக மாறுவதால்
மீதழிந்து - தேனடைகள் உடைந்து மிகவும் அழிந்து
திணி நெடுங் குன்றம் தேன் சொரியும் – கனத்த நெடிய மலை தேனைப் பொழியும்
வான் கண் அற்று அவன் மலை – வானளவு உயர்ந்திருக்கும் அவனது பறம்பு மலை
வானத்து மீன் கண் அற்று அதன் சுனை – அந்த வானத்திலுள்ள விண்மீன்களை ஒத்திருக்கும் அம்மலையிலுள்ள நீர்நிலைகள்
ஆங்கு மரந் தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் – அவ்விடத்தில் அந்த மலையில் மரங்கள் தோறும் கட்டப்பட்ட யானைகளை உடையீராயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும் – இடமெல்லாம் பரவலாக நிறுத்தப்பட்ட தேர்களை உடையீராயினும்
தாளில் கொள்ளலிர் – உங்கள் முயற்சியால் பறம்பு நாட்டைப் பெற முடியாது
வாளில் தாரலன் – உமது வாள் வலிமையால் அவன் தரமாட்டான்
யான் அறிகுவன் அது கொள்ளுமாறு – நான் அறிவேன் அதனைக் கொள்ளும் வழி
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி – சுத்தி செய்து வடித்து, முறுக்கப்பட்ட நரம்பினையுடைய சிறிய யாழைத் தயாரித்து மீட்டியபடி
சுகிர் – வடித்தல் (To rub clean and smooth, as a lute string)
விரையொலி கூந்தல் நும் விறலியர் பின் வர - நறுமணமிக்க தழைத்த கூந்தலையுடைய உங்கள் மனைவியர் விறலியராகப் பின் வர
ஆடினிர் பாடினிர் செலின் – பரிசிலராக நீங்கள் ஆடிப் பாடியபடி சென்றால்
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும் - பாரி உங்களுக்கு பறம்பு நாட்டையும், மலையையும் கூட ஒன்றாகத் தானம் செய்வான்.
இப்பாடல் நொச்சி திணை ஆகும். தன்னுடைய மதிலை வேண்டி உள்ளிருந்தே, வெளியே இருக்கும் பகை அரசனோடு நொச்சிப் பூவைச் சூடிப் போரிட்டு அம்மதிலைக் காப்பார்கள்.
இப்பாடல் மகண் மறுத்தல் துறை ஆகும். மூவேந்தர் கூடிப் பாரியின் பறம்பு மலையை முற்றிகை இட்டுப் பாரியை அழித்தது பாரியின் மகளை மணப்பதற் காகவே எனத் தெரிகிறது. மகள் மறுத்தல் என்னும் துறையில் வரும் பாடல்களில் மகளின் தந்தை இன்னார் எனத் தெரியும்.
விளக்கம்:
களிரும், தேரும் கொண்டு போருடற்றுவது உமக்குப் பயன் தராது என்றும், ’உங்கள் மனைவியர் விறலியராகப் பின் வர, பரிசிலராக நீங்கள் ஆடிப் பாடியபடி சென்றால்’ பாரி உங்களுக்கு பறம்பு நாட்டையும், மலையையும் கூட ஒன்றாகத் தானம் செய்வான் என்றது அவ்வாறு செய்ய அவர் மனம் கொள்ளார் என்று எண்ணிப் பாடினார்.