"சீட்டுக்கம்பெனி"
"அடியேய் லீலா! காட்டுகத்து கத்தறேனே எங்கயாவது ஏன்னு கேக்குறாளா பாரு"
"அப்படி என்ன தான் இருக்கோ அந்த பாட்டுல. டி.விய பார்த்தா எம்பொண்ணுக்கு உலகமே மறந்துடும்"
"அய்யய்ய எப்ப பாரு கத்திக்கிட்டு. ஏம்மா கத்தற?"
"இந்தாடி இந்த 500 ரூபாயை எப்போதும் போல அந்த சீட்டு கம்பெனில கட்டிடு"
"ம். சரி. அப்பாவுக்கு தெரியாம மாசாமாசம் 500, 500 ரா கட்டிக்கிட்டு வர. என்னைக்கி மாட்டப்போறியோ அப்பாட்ட"
"அடியேய். நீயே காட்டி குடுத்துருவ போல. எல்லாம் உனக்குத்தாண்டி. எல்லாம் அப்புறமா சொல்லிக்கலாம்"
"ம். சரி சரி போய்ட்டு வரேன்"
"ஏண்டி அந்த நாலு இட்லியையும் இப்படி கொதரி கொதரி வச்சிருக்கே"
அதை காதில் போட்டுக்கொள்ளாமல் லீலா எப்போதோ சென்றுவிட்டாள்.
சில மாதங்களுக்கு பிறகு.....
காலேஜ் முடிந்து லீலா வர அம்மா சிலையாக அமர்ந்து இருந்தாள்.
"ஏம்மா இப்டி உக்காந்து இருக்கே"
"லீலா இன்னைக்கி நீயூஸ்ல சொன்னாண்டி, நாம கட்டிட்டு வந்த சீட்டுக்கம்பெனிக்காரன் சதி பண்ணிட்டு ஓடிட்டாண்டி, எனக்கு அப்போ இருந்து கையும் ஓடல காலும் ஓடல, வயிரெல்லாம் கலக்கிக்கிட்டே இருக்குடி. சிறுக சிறுக சேத்த பணமாச்சே", என வெடித்து அழ ஆரம்பித்தாள் அம்மா.
"அய்யோ அம்மா. அழாதே! அழாதே! பணம் எங்கேயும் போகல. நம்மகிட்ட தான் இருக்கு"
"என்னடி சொல்ற!!!!"
"அம்மா! மாசாமாசம் பணம் தருவியே! அதுக்கு ரசீது அப்பாவுக்கு தெரியாம நீயே வெச்சுக்கோன்னு சொன்னியா. பணத்த நான் அந்த சீட்டு கம்பெனில போடல. என்னோட ப்ரண்டோட அம்மா சொன்னாங்க. போஸ்ட் ஆபிஸ்ல போட்டுட்டு வா. அது ஒண்ணும் ஆகாது. பயமும் இருக்காது. அம்மாக்கிட்ட அப்புறமா எடுத்துசொல்லுணு. நானும் ஒவ்வொரு தடவையும் சொல்லலாம்னு வருவேன். ஆனா அப்புறமா சொல்லிக்கலாம்னு இருந்துடுவேன். நீ திட்டுவியோன்னு பயம்"
"அடியே! நான் பெத்த மவளே! என் வயித்துல பாலவாத்தடி. உங்கப்பா கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் வீணாப்போகாதுண்ணு நிரூபிச்சிட்ட. உன்னோட ப்ரண்டு வீட்டுக்கு என்னை கூட்டிட்டுப்போ. அவங்க அம்மாவுக்கு நன்றி சொல்லணும். உங்க மாமன் சொன்னான். பொட்டபுள்ளய ரொம்ப படிக்க வைக்காத. ஒருத்தன் கையில புடுச்சுகுடுன்னு. நான் படிக்காதவ. ஆனா நீ படிச்சதால தானே, நல்லது எது கெட்டது எதுன்னு தெரிஞ்சுகிட்ட"
"அய்யோ அம்மா. இதெல்லாம் உங்கிட்ட இருந்தும், அப்பாகிட்ட இருந்தும் வந்தது. சரியா", என சிரித்தாள் லீலா.