திருந்தி வாழ்வாய் திருமகனே அம்மாவின் ஆத்மா

மழலை நீ மடியிலே - என்
மனையாளன் மரணத்தின் பிடியிலே
காத்திருந்த காலனவன்
கல்லறைக்கு கூட்டிச்சென்றான்

கூப்பாடு போட்டேனே!
கேட்பார் யாருமில்ல
கதறி நான் அழுதேனே
கண்டுகொள்ள யாருமில்ல

வெள்ளாடை உடுத்தி நான்
விதவையாய் வீதியிலே
மஞ்சள் முகமிழந்து
மலர் உதிர்ந்த மாலையானேன்

நான் நாட நாதியில்லை -நான்
நடமாட தடையானேன்
கள்ளமில்லா முல்லை -நான்
கலையிழந்த சிலையானேன்

அன்னை என் இடைபற்றி
அன்ன நடை நீ பழக
நடையாய் நான் நடந்து
கால்நடையாய் உழைத்தேனே!

விவரம் அறியா பிள்ளை நீ
வீதியிலே விளையாட -நான்
விதியோடு விளையாடும்
வீரமங்கை யானேனே!

பத்திரமாய் நீ வளர -நான்
பத்துப் பாத்திரம் தேச்சேனே !
பேணிக் காத்து வளர்த்திடவே
பெருந் துயரம் அடைந்தேனே!

கட்டுச்சோறு கட்டிக்கிட்டு
கல்வி கற்க நீ போக -நான்
கால்வயிறுக் கஞ்சியோட
கழனியிலே கஷ்டப் பட்டேன்

கல்லூரி நீ போக -நான்
கனலிலே கல்லுடைச்சு
காசு பணம் சேர்த்து வச்சேன்

காசு பணம் பத்தலன்னு
கந்து வட்டி கடன் வாங்கி
கல்லூரி சேர்த்து விட்டேன்
பிள்ளை நீ பட்டம் பெற -நான்
பட்ட பாடு பெரும்பாடு

ஆன்றோனாய் உனையாக்க
அய்யனார வேண்டிகிட்டேன்
சான்றோனாய் உனைப்பார்க்க
சாமிகிட்டே நேந்துகிட்டேன்

சொகமாய் நீ வாழ -நான்
சொத்து பத்து சேர்த்தேனே
சொந்தகால் முளைத்த பின்னே
சொன்னபடி கேக்கலையே!

கட்டுக் கடங்கா காளதானே
கன்னியவள் கை பிடிச்சான்
கட்டியவள் கால்பணிந்தான்
கட்டிளுக்கே கட்டுப்பட்டான்

நாளும் நகையாடி -வாயாடி
நங்கையவள் நகம் கடித்தாள்
நான் வளர்த்த நன்மகனோ
நஞ்சு கக்கும் நாகமானான்

அவளொருத்தி வந்தபின்னே
அவ பேச்சக் கேட்டுக்கிட்டு
அன்னை நான் திண்ணையிலே
அனாதையாய் தனிமையிலே

அகங்காரி வசைபாட- இசையாது
அறிவிழந்த மானுடனாய்
அறிந்தும் அறியாதவனாய்
அசட்டையாக இருந்தானே!

பாலூட்டி வளர்த்தவளை
பரிதவிக்க விட்டானே!
பாசம் காட்டி வளர்த்தவளை
பணத்தைக் கட்டி விடுதியில் விற்றானே!

பேரன் பேத்தி பாக்காம
பேதலிச்சு போனேனே!
பேரு சொல்லி கூப்பிடத்தான்
பேரு கூட தெரியலையே !

கண்ணுல தான் காட்டிபுட்டா -நான்
கண்மூடிப் போவேனே!
காலனவன் கால் பிடித்து
இடுகாடு போவேனே!

ஒற்றை மகன் உடனிருக்க
உயில் எழுதிக் கொடுத்தேனே!
தள்ளி வச்சு பார்த்தவனோ !
கொள்ளி மட்டும் வச்சானே!

தேவனவன் திருவடியில்
தேம்பித் தேம்பி அழுதாலும்
திரும்பி நான் வருவதில்லை
திருந்தி வாழ்வாய் திருமகனே !

- அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு)

எழுதியவர் : அழகர்சாமி சுப்ரமணியன் (அ. (25-Sep-13, 10:10 am)
பார்வை : 1772

மேலே