@@@ செவிமடுப்பாயோ சிந்திப்பாயோ @@@

முத்து மலர் தத்தையென திங்கள்முக
===மங்கையென சாந்தநிலாமுகம் கண்டு
பித்து மனம்பொங்க பருவ மோகங்கொண்டு
===வார்கற்பனையில் காதல் மது கொள்ளும்
சக்தி மிக்க இளைஞனே மறந்தாயோ
===பூமிமகள் நீர்ச்சத்திலக்க கண்ணீர் விட்டு
சத்த மில்லாமல் கட்டிலில் விழுந்ததந்தை
===கைப்பிடித்து குடும்பம் காப்பாற்ற சொன்னதை

கனிவளத்து தேன் நிலவாய் கோதைமகள்
===பனிமலர் இடையழகில் சொட்டும் தேனை
தேனீயாக பருகிவிட தளிருள்ளத்தில் வீரமுறும்
===இளைஞனே இங்கு மறந்தாயோ சீருடையில்
அணிவகுத்து நீகற்றிட கழுத்துதாலி விற்று
===கண்ணாக கல்விகற்க கண்ணீரின் வலியிலும்
மணிநேரம் பாராது பணிசெய்து பள்ளிக்கனுப்பிய
===தாயவளின் தாலிமீட்க கடன்பட்டாய் என்பதை

கண்ணுக்கினிய நங்கையிவள் தளிர் மேனி
===வாசம் தீண்ட கண்ணாடியென உடைந்து
கன்னியிவள் பாததடம் ரசித்து துணைநடைபோட
===துடித்திடும் இதயத்தில் துளியும் இல்லையோ;
பெண்ணிவள் தமையனுக்காய் தன் மணவாழ்வை
===தள்ளிவைத்தால்;அண்ணனுக்காய் தன் படிப்பை
மண்ணை பிசைந்து சூளையில் கற்றுக்கொண்டால்
===காதலியை கண்டிட தன்னவரை மறந்தாயோ

எண்ணிய காதல் கொண்டு உலகம்சுற்றி
===களிப்பில் ஆழ்ந்து ஊடலும் கூடலுமாய்
கன்னியவள் நிழல்போல உடனிருக்கத் தூண்டும்
===இளம் பருவத்தின் மாற்றம் என்றாலும்
கண்ணியன் நீமனதை கட்டுப்படுத்த வேண்டாமோ
===விழித்துக் காத்த குடும்பமும் வழிகொடுத்து
மின்னிய சமூகமும் நாளை பழிக்காதோ
===பணியை செய்திடு பண்பாளனாய் நின்றிடு

இளங்கன்று வயதினில் கட்டுப்பாடாய் வாழ்ந்த
===வாழ்வில் வந்த வருமானத்தில் வழிமாறாதே
வளங்கொடுத்து காத்து வளர்த்த குடும்பத்தில்
===ஆழிஅலை மகிழ்ச்சி துள்ள பார்த்திடு
சிலாக்கியன் நீயென்று இவ்வுலகம் போற்றும்
===உன் மனதும் பெருமிதம் கொள்ளும்
இளங்கொடி வந்திடுவாள் உலகில் இனியவன்
===இவனேயென இனிதே நகரும் இனியவாழ்வும்.

...கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (25-Sep-13, 10:55 am)
பார்வை : 166

மேலே