மனிதனின் மனக்குமறல்
தினமும் அலுவலகத்துக்கு செல்லும் பொது அலுவலகத்தின் அந்த தெருமுனையில் இருக்கும் சித்தி விநாயகரை வணங்கி விட்டு செல்வது தான் கார்த்திக்கின் அன்றாட வழக்கம். அந்த விநாயகரிடம் தன் மனக்கவலையெல்லாம் கொட்டி விடுவார்.
இரண்டாவது முறையாக அலுவலகத்திடமிருந்து வந்த அந்த நோட்டீசை பார்த்ததிலிருந்து பெரும் மனக்குழப்பத்தில் இருந்தார். தான் வசிக்கும் வீட்டின் தெருவை நெடுஞ்சாலையாக்குவதற்காக வேண்டி நிலத்தை கையகப்படுத்துவதற்காக அரசங்கத்திடமிருந்து வந்த நோட்டீஸ்தான் அது.
கார்த்திக் தான்வசிக்கும் வீட்டை ஒவ்வொரு அறையாக சென்று பார்த்து விட்டு திண்ணையில் வந்து உட்கார்ந்து பெரும்முச்சு விட்டார். தந்தை வழித் தாத்தா விட்டுச் சென்ற பெரிய வீடு. அவர் நினைவெல்லாம் பின்னோக்கிச் சென்றது. குழந்தையாக, தான், இருந்தபோது இந்த வீட்டில் விளையாடிய விளையாட்டையும், வீட்டில் இருந்த நான்கு தூணிலும் தட்டாமாலை சுற்றியது நினைவுக்கு வந்ததில், கண்ணில் இரு ஓரத்திலும் நீர் கசிந்தது.
அன்றும் அலுவலகத்துக்கு செல்லும்போது விநாயகரை சந்தித்து தன் மனக்குறையெல்லாம் கொட்டி விட்டு அலுவலகத்தில் தன் இடத்தில் வந்து அமரும் போது தன் நண்பன் ரமேஷ் ஒரு குண்டை தூக்கி போட்டார். அலுவலக விஷயமாக பதினைந்து நாட்கள் மைசூர் வரை செல்வதற்கான ஆர்டர், தலைமை அலுவலகத்திலிருந்து வந்திருப்பதாகச் சொன்னார்.
வீட்டிற்கு வந்து தன் மனைவியிடத்தில் ஊருக்கு புறப்படுவதற்கான ஆயுத்தங்களை செய்ய சொல்லிவிட்டு படுக்கச் சென்று விட்டார். .மறுநாள் காலை 6 மணியளவில் சதாப்தி ட்ரெயினில் மைசூருக்கு சென்று விட்டார் . பதினைந்து நாள் கழித்து அன்று தான் மைசூரிலிருந்து வந்திறங்கினார். அலுவலத்துக்கு கிளம்ப தயாரானார். வழக்கம் போல் விநாயகரிடம், இன்றும் தன் மனக்குறைகளை சொல்ல வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அங்கே அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், எதற்காக தினமும் இறைவனை அவர் வேண்டினாரோ அது இறைவனுக்கே, அந்த சித்தி விநாயகருக்கே நிகழ்ந்துவிட்டது. அலுவலகத்து அருகில் பெரிய மேம்பாலம் அமைப்பதற்காக அந்த விநாயகர் கோவிலையே இடித்து விட்டனர் அந்த நெடுஞ்சாலை துறையினர். ஐயாஹோ! மனம் பெருங் குரல் எடுத்து அழுதது.
மனிதருக்கு துன்பம் வந்தால் இறைவனிடம் சென்று முறையிடுவோம். அந்த இறைவனுக்கே ஒரு துன்பம் நேர்ந்தால் யாரிடம் சென்று முறையிடுவது?..........
***************************