சுமை தாங்கிகளே .....!!!

பகலெல்லாம் செக்கு மாடுகளாய்
பாரம் முதுகில் சுமந்திடுவார்
பகலோன் நெருப்பாய் சுட்டாலும்
பரபரவென மூட்டை தூக்கிடுவார் ....!!

வியர்வை வழிய உழைத்திடுவார்
அயர்வின்றி அடுத்தடுத்து பணிபுரிவார்
முயற்சியில் சிறிதும் தளரமாட்டார்
முடிக்கும் வரையில் ஓயமாட்டார் ....!!

வெயிலோ மழையோ ஏதும்கருதார்
வெந்தாலும் நனைந்தாலும் பொருட்படுத்தார்
வெட்டியாய் என்றும் இருக்கநினையார்
வெலவெலத்தாலும் கருமமே கண்ணாவார்.....!!

கைநிறைய வரவே வந்தாலும்
கையோடு வீடு கொண்டுசெல்லார்
மதுக்கடை நாடி சென்றிடுவார்
மதுவுக்கு பணத்தை இறைத்திடுவார் .....!!

பாடுபட்டு ஈட்டிய பணமதனை
பாழும் போதைக்கே செலவிடுவார்
குடித்துக்குடித்து குடல் வெந்திடுவார்
குடித்தனம் எப்படி நடத்திடுவார் .....?

சுமைதாங்கிகளே உழைப்பாளிகளே
சுகமான வாழ்வை விட்டுவிட்டு
அரக்கனாம் மதுவுக் காசைப்பட்டு
அழிவை நோக்கி அடிவைக்காதீர் ......!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Oct-13, 11:38 pm)
பார்வை : 120

மேலே