+திருந்தாத ஜென்மங்கள்!+(அ வேளாங்கண்ணி)

உடையிலேயே தெரிந்தது அவனது செல்வச்செழிப்பு. உயர்தர கண்ணாடியும், ஷுவும் அணிந்திருந்தான். அவனது நடையிலே அப்படி ஒரு மிடுக்கு. அவனைப்பார்த்ததும் தெருவே அப்படியே நின்றது. இவனும் ஸ்டைலாக ஹீரோ போல நடந்து கொண்டிருந்தான். அப்பப்ப தனது கையிலிருந்த சிகரெட்டையும் ஊதிக்கொண்டிருந்தான். இவனை பார்த்தவுடன் எங்கிருந்தோ ஒரு பிச்சைக்காரனும் வந்து விட்டான். அவன் கேட்பதற்கு முன்பே இவன் ஒரு நூறு ரூபாயை எடுத்து போட்டான். அவன் ஆவென்று வாயைத் திறந்தவாறே இவனை என்னன்னவோ சொல்லி புகழ ஆரம்பித்துவிட்டான்.

"ஐயா தருமபிரபு!"

"எங்க எஜமானே!"

"கர்ணமகராஜா!"

"நீங்க வாழ்க! வாழ்க!"

அப்படியே மிதப்பது போல இருந்தது இவனுக்கு..

இன்னும் ஒரு நூறு ரூபாய் கொடுத்தான்.

"எங்க இன்னொரு தடவ சொல்லு.."

"ஐயா தருமபிரபு!"

"எங்க எஜமானே!"

"கர்ணமகராஜா!"

"நீங்க வாழ்க! வாழ்க!"

இன்னும் ஒரு நூறு ரூபாய் கொடுத்தான்.

எங்க இன்னொரு தடவ சொல்லு..

"ஐயா தருமபிரபு!"

"எங்க எஜமானே!"

"கர்ணமகராஜா!"

மூதேவி மூதேவி..

என்ன என்னைய யாரு இப்படி பேசுவது என நினைத்தவாறே மெல்ல கண்ணைத் திறந்து பார்த்தான்..

ஊரே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது..

காலையிலேயே குடித்துவிட்டு சாக்கடையில் விழுந்து கலர் கலராய் கனவு கண்டு கொண்டிந்த அவனை ஒவ்வொருவரும் அருவருப்பாய் பார்த்தனர்.

ஓ கனவா...

என்றவாறே எழுந்து மீண்டும் கடை நோக்கிப்போனான் குடித்து குடித்தே வீணாய்ப்போன குப்பன்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-Oct-13, 3:17 pm)
பார்வை : 214

மேலே