காதலியின் பரிசு

கும்பகர்ணனின் வாரிசு போல் தூங்கும் நான், நீ தினமும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து கோலம் போடும் அழகை ரசிப்பதற்காக, அதிகாலையிலே எழுந்து ஜாகிங் என்ற பெயரால் உன்னை பார்த்து விட்டு வருவேன். அப்படி ஒரு நாள், உன்னை பார்க்க வந்த என்னை, பக்கத்தில் யாரும் இல்லை என்று தெரிந்துக் கொண்டு தடுத்து நிறுத்தி, “இவ்வளவு அதிகாலயிலே தினமும் என்னை பார்க்க வருகிறீர்களே, உங்களுக்கு அப்படி என்னிடம் என்ன பிடித்திருக்கிறது” என்று கேட்டாய். "கருகரு என வளர்ந்து பின்னங்கால் வரை தொட்டு நிற்கும் உன் மேகக் கூந்தல், சூரியனைக் கண்ட தாமரை போல் மலர்ந்திருக்கும் உன் முகம், அம்பு போல் நெஞ்சை துளைக்கும் உன் கண்கள், பவளத்தையே ஏங்க வைக்கும் உன் செந்நிற உதடுகள், கண்களை கூசச் செய்யும் உன் வெண்ணிற பற்கள், சங்கு போன்ற உன் கழுத்து, இருக்கிறதா,இல்லையா என்று தேட வைக்கும் உன் இடுப்பு, அப்புறம் உம், உன் பிஞ்சு விரல்கள்". அதைப் பார்த்து தான் வெண்டைக்காய்க்கு ஆங்கிலத்தில் “ladies finger” என்று பெயர் வந்திருக்கும். இப்படி உன்னிடம் எல்லாம் பிடிக்கும், ஆனால் இவை எல்லாம் விட நான் உன்னை அனு அனுவாக பார்த்து ரசிப்பதை, நீயும் கோலம் போட்டுக் கொண்டே உள்ளுக்குள் ரசித்து, அதனால் ஏற்படும் நாணத்தை மறைக்க முடியாமல் முகம் சிவந்து, கடைசியில் வேக வேகமா கோலத்தை போட்டு முடித்து எழுந்து, அதே நாணத்தால் என்னைப் பார்த்து ஒரு வெட்கச் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு உன் வீட்டுக்குள் ஓடிச்செல்வாயே அந்த “பெண்மை” தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றேன். உடனே, மீண்டும் ஒரு முறை அக்கம் பக்கம் பார்த்து விட்டு, என் அருகில் வந்து, என் கன்னத்தில் ஒரு அழகான முத்தத்தை பரிசாக பதித்து விட்டு உன் வீட்டுக்குள் சென்று மறைந்து விட்டாய்.

எழுதியவர் : சிட்னி சொக்கன் (17-Oct-13, 11:43 am)
சேர்த்தது : sydney chokkan
Tanglish : kaathaliyin parisu
பார்வை : 152

மேலே