எனதருமை கணவரே!(தாரகை)

எனதருமை கணவனே!
ஏன் தாமதம் என்று
நிற்கவைத்து கேள்வி
கேட்பவரே!
சற்றே அமருங்கள்!
சட்டென்று முடியாது என் பதில்.
கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொள்கிறேன்
கண்ணீருக்கு இலகுவாய் இருக்கும்
கதை சொல்லும் போது...
வேலை முடித்து
வெளியில் வந்தேனே
கூலி தாமதம்
வரிசையில் நிற்பதில்
நேர்மையில்லாததால்
வரிசை நகர தாமதம்
பெண் என்பதால்
பேசிய கூலியில்
பாதியைக் குறைத்ததால்
போராடி மீதியைப்
பெற்றதில் தாமதம்
கூட்ட நெரிசலில்
கூடும் ஆசையில்
தேகம் உரசையில்
கோபம் வெடிக்கையில்
சண்டை மூண்டதில்
வந்த தாமதம்
நேரமானதால்
ஓடிவந்ததால்
அறுந்த செருப்பால்
நடக்கத் தாமதம்
பேருந்து நிலையம்
வந்தாலும்
பேருந்து வரவில்லையே
காத்திருந்து
கால்கள் தேய்ந்ததால்
கால தாமதம்
பிறகும் ஏன் தாமதம்
என்கிறீரா?
பளுவைத் தாங்காமல்
நடந்த பேருந்து
பழுது ஆனதால்
ஆன தாமதம்
வாங்கிய கூலியை
தாங்கிய கைப்பையின்
வயிரைக் கிழித்தவன்
காதைத் திருவியே
காவல் நிலையம்
சேர்க்க தாமதம்
புகார் எழுத தெரியாததால்
போகும் வரும் ஆட்களிடம்
உதவி கேட்டு எழுதி முடிக்க
தாமதம்
வரும் வழியில்
வஞ்சரம் கருவாடு
வாசனை இழுத்ததும்
வந்த உன்னினைவால்
அதை வாங்க தாமதம்
கருவாடு வாசம்
காற்றில் கலக்க
நாயின் மூக்கில்
நன்றாய் ஏற
ஓடி ஒளிந்து
தப்பிவர ஆன
தாமதம்
காலையில் உம் அம்மா
கால்வலி மருந்து
தீர்ந்ததை சொன்னார்
தேடி வாங்க
இத்தனை தாமதம்.
நிற்க வைத்து கேள்வி கேட்டு
என் நேரத்தை வீணடிப்பவரே!
ஒரு கேள்வி நான் கேட்கட்டுமா?
வேலை எதற்கும் செல்லாமல்
வெட்டிப் பேச்சு பேசிக்கொண்டு
வீட்டில் படுத்து
தூங்கித் தூங்கியே
உம் வாழ்நாள் முழுவதும்
தாமதமாகிவிட்டதே
என்ன செய்யப் போகிறீர்?