பிரசவ நேரம்
என்னை பெற்ற நேரம் –நான்
அன்னையை பெற்ற நேரம்
அன்று நான் பிறந்தநேரத்தில்
அன்னையின் பிரசவவலிகளை
இன்றுயென் மருத்துவ படிப்பினாலே
அறிந்து கொண்டேன் ………!!
யுத்தம் முத்தமிட்ட சத்தமது
பிரசவ நேரத்தில் பெண்மையான
எம் அன்னையின் அழுகை கானம்.
ரத்தம் ஊற்றப்பட்ட குளியலில்
அஆ என்ற என் அகர அழுகைகீதம்
தொப்புள் கொடி மாலையுடன்
என் உடலெங்கும் விலைமதிப்பற்ற
பன்னீர் குட முத்து துளிகள்.
எப்படி துடித்திருப்பாள் ?
எப்படி தாங்கியிருப்பாள் ?
என் அன்னை…..!
இதோ ! என் நினைவுகள்
பின்னோக்கி செல்கிறது
தாயின் கருவறையில்
நான் பத்தாவது மாதத்தில்……
அந்த பிரசவ நேரம்…….
நாடி உச்சம்பெற்று
நரம்பு முறுக்கம்பெற்று
”பிரசவ குத்து” தீவிரம்
எலும்பு கிளர்ச்சிபெறும்
உச்சத்தின் உச்ச வலிகள் ..!
எந்த ஆண் மாவீரனும்
உணராத யுத்த வலி !
மூளை திசுக்களும்
உணர்ந்து உறைந்த
அந்த வலி ரணம்….!
எழுத்தில் விவரிக்கமுடியா
‘பிரசவ நோ’க்களை
எதிர்த்து அடிபணியாது
வாய் பிளந்து
கம்பீர ஆக்ரோஷத்தில்
கதறல் ஒலியில் கர்ஜித்து
‘மரண’ எதிரியை
ஊதி தள்ளிய
‘வீர மங்கை’ என் அம்மாவின்
வெற்றி நேரமது.
போரிட்டு மாண்டு மீண்டு
மறுஅவதாரமிட்டு என்
நெற்றியில் வெற்றி
முத்தமிட்ட என் தெய்வத்தின்
வெற்றி நிமிடம் அது...
அந்த நாள் என்
பிறந்தநாள் அல்ல
என்னுயிர் அம்மாவின்
மறு ஜென்ம பிறந்தநாள் !
என்னுயிர் அன்னையின்
அவதார நாள். !!
---------------------------------------> இரா.சந்தோஷ் குமார்