பூனைக்குள் நரி ?
தூய்மையான பாத்திரத்தில்
பாலை நிரப்பி வைக்கிறீர்கள்
பாலின் மேற்பரப்பில்
உங்கள் முகத்தின் பிம்பம் கண்டு
புன்முறுவல் பூக்கிறீர்கள்
எச்சில் பட்டதையோ
மீந்ததையோ திரிந்ததையோ
நீங்கள் வார்க்காமல்
சுத்தமானதையே சுரக்கிறீர்கள்
தடவிக் கொடுக்கிறீர்கள்
என்பதறிந்து
உங்கள் காலைச் சுற்றுவதை
வழக்கமாக்கி இருக்கும்
பூனையிடம்
இன்னும் நம்பிக்கையை
ஊட்டுகிறீர்கள்
இது உங்களின் குணம் என்று
பூனை நன்கறியும்
நீங்கள்
விழித்திருக்கும் வேளைகளில்
உங்களுடன் மட்டுமே
இருப்பதான எண்ணத்தில்
தூங்கி விடுகிறீர்கள்
நீங்கள்
விழித்திருப்பதைப் போலவே
விழித்திருக்கும் மற்றவர்களுடனும்
நம்பிக்கையை
வளர்த்துக் கொண்டிருக்கும்
பூனை.,
உங்களைப்பற்றி
நன்கறிந்திருக்கிறது !