அன்பான நன்றி

உயிரும் மெய்யும் உயிருடன் கலந்து
உயிர்மெய்கள் உள்ளத்தில் பெருகி
உருவம் பெறும் கவியாய் வெளிவரும்
உவகைப் பெருக்குடன் எழுத்தாகும் !
வல்லினமும் மெல்லினமும் சேர்ந்து
இடையினமும் இடையே இணைந்து
பொருள் படைத்த சொல்லாகி இங்கே
பதிவாகி பலகவிதைகள் படைப்பாகுது !
சொல்நயம் கவிநயத்துடன் கலந்திட்டு
பொருள் நயத்துடன் வரிகள் உருவாகி
தேனுடன் இணைந்த கற்கண்டு பாகாய்
இன்சுவை கவிதைகள்பல பிறக்கின்றன !
முப்பால் அளித்திட்ட வள்ளுவன் வழியில்
தப்பாமல் வழங்கிடும் தமிழ் கவிதைகள்
எப்பால் இனமும் இன்பமுறும் வகையில்
அப்பால் அகிலமும் மகிழ்ந்திடும் நாளும் !
அளவிலா அன்புடன் பண்புடன் பழகிடும்
தவறாமல் என்றும் வாழ்த்தும் வழங்கிடும்
தமிழ் உள்ளங்களே தாள் பணிந்த நன்றி
என்றும் தொடரும் நம் பணியும் இங்கே !
பழனி குமார்