காதல் இதுதானோ-6

"மது.. எவ்ளோ நேரம் ஆச்சு.. கீழ இறங்கி வா.."

தன் தாயின் குரல் கேட்டு மாடி படிகளில் இறங்கி வந்தாள் மது.

இத்தனை நேரமாய் தன் காதலின் வலியை சுகமாய் அனுபவித்து கொண்டிருந்தவள், இப்போது தன் வாழ்க்கையை பற்றி முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்..

சுற்றும் முற்றும் பார்த்தாள்..
தனக்கு தேவையான எதையும் தனக்கு தோன்றும் முன்னே அறிந்து கொண்டு நிறைவேற்றிடும் பெற்றோர்..
எல்லாவற்றிலும் சுதந்திரம் கொடுத்திருக்கும் அவர்கள் காதலுக்கு மட்டும் சிகப்பு கொடி காட்டுவது விந்தை தான்..

ஒரு முறை அவர்களிடம் பேசி பார்ப்போமா என்று யோசித்து கொண்டே தன் தாயின் அருகே சென்று அமர்ந்தாள்..

எப்படி தொடங்குவது என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தவள், திக்கி திணறி பேச ஆரம்பித்தாள்..

அம்மா.. என் கல்லூரியில் ஒரு..

அவளை இடை மறித்து பேசினாள் அவள் அன்னை..

“கல்லூரி என்றதும் தான் நினைவுக்கு வருகிறது..இன்று என்னோடு பணி புரியும் புஷ்பா டீச்சர் அழுது கொண்டிருந்தாள்.. கல்லூரியில் படிக்கும் அவள் மகள் காதலிக்கிறேன் என்ற பெயரில் யாரோ ஒருவனோடு ஊரை விட்டு சென்று விட்டாளாம்...”

இதற்கு பதில் அவளை பெற்றவர்கள், மகளின் காதலுக்கு சம்மதம் சொல்லியிருக்கலாம்... தேவையா இந்த வம்பு?

தனக்கு பேச கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டாள் மது...
அப்படியாவது தன் நிலைமையை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று யோசித்தாள் விவரமாக..

“என்ன உளறுகிறாய் நீ? அதெப்படி முடியும்? இருபது வருடங்களாய் வளர்த்தவர்களுக்கு தெரியாதா பிள்ளைக்கு ஏற்றவன் யார் என்று..”
பொரிந்து தள்ளினாள் அவள் அம்மா...

ஒருவேளை அந்த பெண் தேர்ந்தெடுத்தவன் நல்லவனாய் இருந்திருந்தால்??

“நிச்சயம் வாய்ப்பில்லை.. சின்ன பிள்ளைக்கு என்ன தெரியும்? ஏமாற்றுபவன் தன்னை உத்தமன் போல் தான் காட்டி கொள்வான்..”

பேச முடியாமல் வாயடைத்து போனாள் மது...
மீண்டும் தொடர்ந்தாள் அவள் தாய்.. இந்த முறை குரல் தாழ்த்தி..

“இங்க பாரு மது.. உன் அப்பாவை பற்றி நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியதில்லை... நீ இது போல் ஏதும் செய்து விட்டு வந்தால் மகள் என்றும் பாராமல் உன்னை கொன்று விடுவார்..”

மூச்சு காற்று கூட கேட்காத அளவுக்கு அமைதியாகி போனாள் மது.. கண்கள் சிவந்திட கண்ணீர் துளிர்த்தது..

நேராக எழும்பி சென்று தன் கை பேசியை எடுத்தாள் ஒரு முடிவோடு...

தொடரும் காதல் பயணம்.. :)

எழுதியவர் : மது (31-Oct-13, 6:11 pm)
பார்வை : 98

மேலே