மரபணு மாற்றம்---அஹமது அலி

இயற்கையோடு விஞ்ஞானம் சேர
==இயல்பாக நன்மை பயக்கும்
இயற்கைக்கு முரணானால் மாறாக
==இதுவே நம்மை அழிக்கும்
...........
...........
மாறாமல் தொட்டுத் தொடர்வது மரபு
==உருமாறாமலும் கரு மாறுவது திரிபு
அசலை நகலெடுத்து அதையே
==அசலென்பது அறிவிற்கு ஏற்புடமையா?
..........
..........
உயிர்களின் பெருக்கத்திற்கேற்ப நம்
==உணவை பெருக்கிடும் இயற்கை
இயற்கை சமன்பாடு இதைச் செய்யும்
==இயற்கையோடு இணைந்து சென்றால்
.........
.........
மரபணு மாற்றுப் பயிர்களை சந்தைகளில்
==மெளனமாய் ஏற்றுக் கொண்டால் மந்தைகளே
விதையில் விசம் கலந்து விஞ்ஞானமே
==விளைநிலங்களை வீணடிக்கும் விந்தையிது!
.........
.........
சூலகம் திறக்கையில் மகரந்த கலப்பில்
==சூழ்நிலையால் விசமெடுக்கும் வண்டுகள்
மற்றொரு மலருக்கு தருவதும் விசமே
==மலர் தரும் கனியோ காயோ அமுதவிசமே!
........
........
மரபணு மாற்று முதல்பயிர் கத்தரிக்காய்
=மதியாமல் துரத்தியடித்தன மதிமிக்க நாடுகள்
வரவேற்று சந்தைப் படுத்தியது இந்தியா
==வரப் போகும் ஆபத்தை அது உணர்ந்ததா?
.............
............
விளைச்சல் பெருகுமாம் சத்துக்கள் மிகுமாம்
==வளம் சிறக்குமாம் வறுமை ஒழியுமாம்
உலகக்கண்ணன் பெரிய அண்ணன் அமெரிக்கா
==உரத்துக் கூவும் வியாபார உத்தியிது!
...........
...........
தாய்ப்பாலுக்கும் மாற்றாய் விஞ்ஞானம்
==தந்துவிட்டது மரபணு மாற்று பசுவை
தாய்ப்பால் தராத தாய்க்குலங்கள்
==தருவித்தாலும் ஆச்சர்யமில்லை அப்பசுவை!
.........
.........
ஆட்டின் தலையில் ஆப்பிள் முளைக்கும்
==அருகம்புல்லில் அரிசி விளையும்
மாட்டின் கொம்பில் மாங்காய் காய்க்கும்
==மரபணு மாற்றத்தில் எல்லாம் மாறும்!
........
........
இயற்கையோடு முரண் விளையாட்டு விபரீதமே
==இயற்கையை விட்டு விலக வரும் நோயுமே
மரபணு மாற்று மாற்றம் தரலாம் உடனே
==மக்கள் நமக்கு ஆரோக்கிய வாழ்வைத் தருமா?