எது அழகு

கருவறையில் நான் கண்ணயர்ந்திருந்தேன்
கடவுள் எந்தன் கனவிலே வந்தார்
'ஏனடா தம்பி! என்னதான் சிந்தனை?'
'ஐயனே!யானும் அழகனாய்ப் பிறக்க
ஆவன செய்வீர்! அத்துடன் எனக்கு
பெரும் பேரறிவும் உலன் தர வேண்டும்'
என்று நான் கேட்டேன். இறைவன் சொன்னான்
'எதுவோ ஒன்றுதான் உனக்கு நான் தருவேன்
எதுவென்று நீயே எனக்குரைப் பாயே!'

கருவில் இருந்து கண்ணை விழித்தேன்
பற்பல் காட்சிகள் மனதில் ஓடின
லிங்கன் என்னும் மாபெரும் தலைவன்
கிரேக்க நாட்டின் தத்துவ ஞானி
பெர்னாட்சா எனும் நாடகத் தந்தை
மில்டன் என்ற கண்ணிலாக் கவிஞன்
இவர்களைப் போல இன்னும் பலபேர்
புற அழகின்றிப் புகழின் உச்சியில்
போற்றப் பட்டனர் புகழுடன் வாழ்ந்தனர்
முகத்தின் அழகை முதலாய் வைத்து
உலகில் யார்தான் உயர்ந்தனர்?
என்றே எண்ணி இறைவனைப் பார்த்து
'அழகோ பொருளோ எதுவும் வேண்டாம்
காலத்தால் அழியாக் கவிஞனாய் என்னை
பிறக்க வைத்திடு பெருமைகள் பெற்றிட'
என்றே பணிவோடு இறைவனை வேண்டினேன்.

நாட்கள் மாதங்கள் நகர்ந்தன. ஒருநாள்
குழந்தை பிறந்த அழுகுரல் கேட்டு
தாதியர் வந்து கைகளில் எடுத்தனர்.
'ஐயோ கருப்பே!அழகிலாப் பிண்டமே!
என்றே நினைத்து எடுத்து அன்னையின்
கைகளில் தந்தனர் கடவுள் சிரித்தான்
அன்னையோ என்னை அள்ளி எடுத்து
'ஆசை மகனே! அழகின் திருவே'
என்றே மகிழ்ந்து என்னை அணைத்தாள்
தாயின் பார்வையில் உருவும் நிறமும்
தணலில் கருகிய தாளாயிற்றே!

எழுதியவர் : s.Nithyalakshmi (10-Nov-13, 5:52 pm)
சேர்த்தது : Nithyalakshmi
Tanglish : ethu alagu
பார்வை : 75

மேலே