அன்பார்ந்த சகோதர சகோதரிகளே
உனது மரணம் குறித்தான செய்திகளை...
சேனல்-4 இல் பார்த்தபடி...
இரவு உணவை உண்ணத் துவங்கினேன்.
உன் மேல் நிகழ்ந்த சித்திரவதைகள்...
என் கண்களில் நீர் பெருக்க
உண்டுமுடித்தேன் என் இரவு உணவை.
நினைவுகள்...பின்னோக்கித் திரும்ப ....
என் கல்லூரி நாட்களில்...
குட்டிமணி, ஜெகனின்...கண்களைப் பிதுக்கிய
பூட்ஸ் கால்களை சபித்தபடி...
கைகழுவி எழுந்தேன்.
உனக்கும்....எங்களுக்குமான
தொப்புள் கொடி உறவுகளை
நண்பனிடம் கதைத்துத் தீர்த்தபின்...
தாழிட்டுத் திரும்பினேன் என் படுக்கைக்கு.
இரவுகளின்....
வழக்கமான உரிமை மீறல்களுக்குப் பின்னர்...
உன் மரணம் ஏற்படுத்திய ஆதங்கத்தில்...
உன்னை நினைத்துக் கொள்கிறேன்.
நீ உள் வாங்கிய கனவுகளை...
உன் வானத்தில் விரிக்க...
நாளைக் காலை...
ஒன்பது முதல் பத்து மணி வரை நடைபெறும்...
மாபெரும் உண்ணாவிரதத்தில் பங்கு கொள்வேன்.
பிறகு...
மாலை நடைபெறும்...
எழுச்சி மிகு....இன்..மான...மிகு...
பொதுக் கூட்டத்தின் நெருப்புரையைக்
கேட்டுத் தணிந்தபின்....
திரும்பிவிடுவேன்....
என் வழக்கமான வேலைகளுக்கு.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
