முதுமையே

கோடிகள் கொடுத்தாலும்
கிடைத்திடா களஞ்சியம்
நம் இல்லங்களின்
முதியவர்கள்!!

கடவுள் அளிக்கும் வரங்களில்
ஆக சிறந்ததாகவும்..
மிக கொடுமையானதாகவும்
அவர்களுக்கு முதுமை!

வெளிச்சம் மங்கிவிட தொடங்கும்
மாலையுடன் இரவுக்கான சங்கம பொழுதில்
ஒரு மூதாட்டியோடு என் அனுபவம்
உங்களுடன்!

கொஞ்சநஞ்ச உயிரை
இழுத்து பிடித்திருக்கும்
இதழ்களின் மெல்லிய முனகல் கேட்டு
விரைந்தேன் வீட்டு படிகளில்!

படிக்கட்டுகளில் விழுந்த தன் சொந்த நிழலை கண்டு பயந்து நின்றிருந்தாள்!
பாதி வாழ்க்கை முடிந்திருந்த
எமனின் தோழியவள்!
எங்கள் வீட்டு கீழே குடியிருக்கும் பாட்டியவள்!

நொடிக்கொருமுறை
கண்கள் மருகியது பாட்டிக்கு!
மனது வலிக்கிறது என்றாள் அவள்
மீண்டும் மீண்டும்!

தன் பேரன் மீதிவைத்த எச்சில் சோற்றை
மிக்சியில் அடித்து தோசை வார்த்து கொடுத்தாளாம் தேவலோகத்து மருமகள்!
கஞ்சி போட்ட துணியை தின்பது போல்
உணர்ந்தேன் என்றாள் பாவப்பட்ட பாட்டி!

இரக்கமற்ற பதர்கள்..
கல்லை கரைத்து
அவர்கள் வாயில்
ஊற்றிட வேண்டும்!

மெத்தை மீது பொத்தென்று விழுந்தும்..
அடர்ந்த போர்வைக்குள் உடலை பொதிந்தும்..
உறக்கத்தை தடுத்திடும் ஊசி குளிரில்..
மின்சாரம் பாய்ச்சும் கொசுக்களின் கடியில்..

வீட்டு முற்றத்தில்
உறங்க வைக்கின்றானாம்
உன்னத கிழவியின் உத்தம பேரன்!

இத்தனை கொடுமையிலும்..

தொல்லை கிழவி
என்று கேலி செய்யப்பட்ட
அன்னையவள்..
நேற்றைய அழகியவள்..

கூறிய வார்த்தைகள்
இதோ..
இப்போதும்
மனதில் அலையடிக்கிறது!

"எனக்கு சாவை கண்டு பயமில்லை மகளே!
எனக்கொரு விபரீதம் நடந்தால்
உலகம் இவர்களை பழிக்கும்
என்றே அஞ்சுகிறேன்!"

என்ன கேட்டு விட போகிறாள் அப்பாவி கிழவி!!
சொத்து கேட்டாளா? சுகம் கேட்டாளா?
நொடி புன்னகையும்..
அன்பாய் பேசி தீர்க்க நிமிடங்களும்
தானே கேட்டாள்!

முதியோரே! மருக வேண்டாம்..
இளமை இன்று ஊஞ்சலாடும்!
நாளை அதுவும் முதுமை காணும்!

அப்போது விளங்கும்..
உங்கள் வலியும் வேதனையும்..
புறக்கணிப்பும்.. போராட்டமும்..

அன்றும் உங்கள் ஆத்மா
வேண்டிடும் இறைவனிடம்..
சீக்கிரம் அவர்களையும்
அழைத்து கொள்ள..

உங்களின் துணைக்கு அல்ல!
அவர்களின் நலனுக்கு!
வலியின் நாட்களை
குறைப்பதற்கு!

எழுதியவர் : மது (22-Nov-13, 9:53 pm)
பார்வை : 388

மேலே