நடந்த பாதை மறக்கலாமா- குமரி

பத்து ஏக்கரு வயலுவச்சு
பக்குவமா வித விதைச்சு
வண்டிமாடு ஏறுபூட்டி வந்தாரு.. அவரு
வசதியாட்டு வாழ்ந்தவரு மன்னாரு..!

பசங்க ரண்ட படிக்கவச்சு
பட்டம் சில வாங்க வச்சு
பகட்டாக ஊருக்குள்ளே நின்னாரு..அவரை
பார்த்து பலரும் வாழ ஆசை பட்டாரு..!

மனசு நிறைய ஆசை வச்சு
மணக்கோலம் காண வச்சு
மருமகளாய் ரண்டுபேர கண்டாரு..அவரு
மகாராணி போல வாழ வச்சாரு..!

பட்டணத்தில் படிச்சவங்க
பகட்டாக வாழ்ந்தவங்க
பணிகிடைச்சு அயல்நாடு விட்டாரு...அவரு
பதபதைச்சு சிலநாளில் கெட்டாரு..!

வயசும் ரெம்ப ஆகிபோச்சு
வயலு பாத்த ஆளும்போச்சு
பலனும் ரெம்ப குறைஞ்சு போச்சு மன்னாரு..அவரு
பக்குவமா வித்துவிட நின்னாரு..!

பை பணமும் தீந்து போச்சு
கை பணமோ கடனும் ஆச்சு
வீட்டுமனை போடும் ஆளு கேட்டாரு...அவரு
விதிய நொந்து வந்த விலை வித்தாரு..!

கிடைச்ச விலைக்கு வித்தாச்சு
கிடப்பிடம் தான் மீதியாச்சு
லட்சபணம் வங்கியிலாச்சு மன்னாரு...அவரு
லட்சியமோ கனவாச்சு சொன்னாரு..!

செலவாணி பீதியாச்சு
சென்ற பணி மூடியாச்சு
பறந்தவங்க திரும்பியாச்சு மன்னாரு..அவங்க
பையெல்லாம் காலியாச்சு கண்டாரு..!

படிச்சவுடன் பறக்குறாங்க
பழையகத மறக்குறாங்க
பகட்டை மட்டும் காட்டுறாங்க மன்னாரு.. இப்போ
பறந்த நாடு பாழாபோச்சு மன்னாரு..!

மூளை இப்போ முழிச்சு போச்சு
மூடத்தனம் தெரிஞ்சு போச்சு
மூலதனம் எல்லாம்போச்சு மன்னாரு...அவங்க
பிறந்தஊரு பஞ்சமாச்சு மன்னாரு...!

இருக்கிறதை விட்டுபுட்டு
இன்னும் மேல ஆசைபட்டு
இந்தியாவை மறக்குறாங்க மன்னாரு... இங்க
இல்லாதவன் பறக்கட்டுமே மன்னாரு..!

============================================
குறிப்பு::
மேலே காணும் காட்சி எழில் கொஞ்சும் குமரி மாவட்டம். புகைப்படம் எடுத்த முகம்காணா அந்த நண்பருக்கு நன்றி..!

எழுதியவர் : குமரி பையன் (25-Nov-13, 1:42 am)
பார்வை : 871

மேலே