பிறந்த நாள் வாழ்த்து------பொதுவாக
உலகம் பிறந்ததும் உனக்காக.
உன்னை ஈன்றதும் அதற்காக.
பழகும் மனிதம் உறவாக—செய்
பந்தம் அதனில் ஒன்றாக.
ஒருதாய் பிள்ளை நாமென்போம்.
ஒன்றே நமக்குள் மரபென்போம்.
இயற்கை ஒன்றே இறையென்போம்-இங்கு.
எல்லாம் நமதே மொழியென்போம்.
சுழலும் காலம் உனக்காக
சுழட்டும் நாட்கள் நீ வளர்க!
நாளை என்பதும் உனக்கல்ல—நல்ல
நாளும் இன்றே நீ தொடர்க!
உணவு என்பது உடலுக்கு
உடலும் வளர்வது உயிருக்கு.
உயிர் என்பதும் உழைப்புக்கு—நீ
உழைப்ப தென்பது உயர்வுக்கு.
வேலை தேடல் வீண்வேலை.
வேலை கொடுப்பது உன்வேலை.
நாளை நீயொரு முதலாளி—உன்
ஆலையி லாயிரம் தொழிலாளி.
வாழ்த்தும் என்னை நினைத்திடுக!
வாழ்வில் உன்னை வளர்த்திடுக!
கைகளை நம்பி செயல்படுக!--வரும்
காலம் உந்தன் கைவசமே!
கொ.பெ.பி.அய்யா.