வேதனையின் சாதனை

கட்டியவள் இருக்க
கண்டவளைப் புணரும்
கண்ணியவான்களுக்கு
காலத்தின் மேடையில்
கடவுள் வழங்கும் கேடயம்.

இருட்டில் நடந்த
இரகசிய நாடகங்களை
வெளிச்சம் போட்டுக்காட்டும்
வித்தியாசமான ஊடகம்.

நம்பிக்கை
துரோகங்களாக
அச்சடிக்கப்படுகின்ற
அந்தரங்கப் பதிப்புகளை
வெளியீட்டு விழாவாக்கிக்
வெற்றி காணும் பதிப்பகம்.

ஒழுக்கம் தவறிய
மானுடத்திற்கு
ஏழை பணக்காரன்
பாரபட்சம் காட்டாமல்
சரியான தீர்ப்பளிக்கும் நீதிபதி.

ஒருவனுக்கு ஒருத்தியெனும்
வள்ளுவத்தின் வாக்கிற்கு
உயிரூட்டி
இராமன் சீதை கண்ணகி
வாழ்க்கைக்கு
மானுடத்தை அழைத்துச் செல்ல
படையெடுக்கும்
வைரஸ்களின் போராட்டம்.

பதர்தனை மட்டும்
அறுவடை செய்ய
விதைக்கப் படுகின்ற
வித்தியாசமான விதை.

விதைப்பவனுக்கும்
விளை நிலத்திற்கும்
இடையேயான போராட்டத்தில்
விளைகின்ற
மானம்கெட்டப் பயிர்

கண்மூடித்தனமான
இருவரின் துடிப்பில்
கண் கூடத் திறவா
மூன்றாவது உயிரில் கலந்து
வம்சத்தை தாக்கும் விஷம்.

விலைமதிப்பில்லா உயிரை
மெல்ல மெல்ல குடித்தபோதும்
வாழ்கையின் உயிர் நாடியான
மானத்தை உடனடியாக
குடித்து விடுவதால்
இதுவும் ஒருவகை சயனைட்.

இடைவேளை(லை)களிலே
வணக்கம் போட்டு
வாழ்க்கை திரைப்படத்தை
முடித்து விடும்
சினிமா கொட்டகை

விழிகள் இருந்தும் குருடாக
மொழிகள் இருந்தும் ஊமையாக
வாய்ப்பளிக்கும் எய்ட்ஸ்
விலை கொடுத்து வாங்கும் வேதனை.
வாங்கியவன் அடைந்ததில்லை சாதனை.


*டிசம்பர் 01 உலக எய்ட்ஸ் தினம்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (1-Dec-13, 2:16 am)
பார்வை : 305

மேலே