தூக்கம்
தூக்கம்
[ நெடுநீர் மறவி மடிதுயில்
நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
திருக்குறள் 0605 ]
கொம்பன் கன்னித்தமிழ்க்
கம்பன் கைவண்ணத்துக்
கும்ப கருணனுக்குக்
கொம்புத் தேன்சுவை---
தூக்கம்
உழைப்பிற்கு ஒற்றடம்---
ஓய்வுக்குச் சிறப்பிடம்---
இயற்கையின் அருட்கொடை---
அமைதியின் அமுதசுரபி---
இரவுச் செடியின்
கறுப்பு மலர்--இது
பகலிலும் சிலரிடம்
மலர்ந்து விடுகிறது----
தூக்கம்
இடம்தேடி வராமல்
அடம்பிடிக்கும் பிள்ளை---
தாலாட்டுக்கு அடங்கிப்
போகும் நல்ல பிள்ளை---
இளைப்பாறு வதற்காகக்
களைப்புத்தாய் பெற்றெடுக்கும்
குழந்தை--மழலையின்
வளர்ச்சிக்கு உதவி--முதுவர்க்குக்
குதிரைக் கொம்பு---
மாத்திரை யால்தான்---சிலருக்குத்
தூக்கம் சாத்தியம்---
மாத்திரையாலும்--சிலருக்குத்
தூக்கம் அசாத்தியம்---
அளவான தூக்கம்
எப்போதும் ஆரோக்கியம்---
அளவிலாத் தூக்கம்
முப்போதும் நோயாக்கம்---
தீய சக்திகள்
தீண்டாத நேரம்---
பாவச் செயல்கள்
கூடாது ஓடும்---
கொட்டாவி வரும்முன்னே---
தூக்கம் வரும்பின்னே---
குறட்டை ஒலிகளின்
அரட்டை அரங்கம்----
தூக்கத்தின் முற்றுகை---
சாவு நிகழ்த்தும் ஒத்திகை---
தூக்கம்
தொலைக்காட்சியைப்
பார்க்கும் போது மட்டும்
தொலைந்து போம்காட்சி---
பாடநூல் எடுத்தாலே
ஓடோடி வந்தே
ஒட்டிக் கொள்ளும் ஆட்சி---
தூக்கம்தான்--சில
கணவர்மார்களுக்குப்
பேசவும், சிரிக்கவும்
வாய்ப்புத் தருகிறது---
நாமே நடித்து
நாமே பார்க்கும்
ஓசித் திரைப்படமாய்
ஓடும் கனவுகள்---
பலநேரம் வரங்கள்---
சிலநேரம் சாபங்கள்---
தூக்கம் தூண்டிவிடும்
கனவுகளிலும்--சில
கண்டுபிடிப்புக்கள்
விழித்தெழுகின்றன---
முள்ளின்மீதும்--சிலருக்குத்
தூக்கம் நேசமாகிறது---
மலரின்மீதும்--பலருக்குத்
தூக்கம் வேசமாகிறது---
சிலரது விடியாத
நீண்ட தூக்கம்
நாட்டுக்கு நல்லது--சிலரது
தூக்கத்தால் துக்கம்---
தூக்கம் சிலருக்குச்
சிறியதோர் இடைவேளை---
பலருக்கு--இதுதான்
இடைவிடாத வேலை---
சோம்பேறிகளுக்குத்
தூக்கம் தொடர்கதை---
சுறுசுறுப் பாளிகளுக்குத்
தூக்கம் சிறுகதை---
தொற்றித் தொடரும்
தூக்கம் யாரையும் உச்சிக்குத்
தூக்கிச் செல்லாது---
தூக்கி வாரிப்போட்டுத்
தாக்கித் தகர்த்துவிடும்---
தூக்கம்
அளவோடு அமைந்தால் ஆக்கம்--
அளவின்றி அமைந்தால் வீக்கம்---