எது பெரிது

"ஊழிற் பெருவலி யாவுள- மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்" – திருவள்ளுவர்

விதி வகுத்த பொழுது "நரி வகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம் நழுவி விழும், சிற்றெறும்பால் யானை சாகும்; வரி வகுத்த உடற் புலியைப் புழுவும் கொல்லும்; வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பர் !" என்பான் பாரதி.

திருப்பத்தூர் என்னும் ஊரிலிருந்து ஒரு அந்தணன் தன் மனைவியுடனும், கைக்குழந்தையுடனும் மதுரையில் இருக்கும் தன் மாமனைப் பார்ப்பதற்காக வருகிறான். காட்டு வழியாக கால்நடையாக வரும் பொழுது மனைவிக்கு தாகம் மிகுந்ததால், அந்த அந்தணன் தன் மனைவியை ஒரு ஆலமரத்தின் அடியில் அமரச்செய்து விட்டு தண்ணீர் தேடிச் செல்கிறான். அவன் திரும்பி வரும்பொழுது அவனது மனைவி மார்பில் ஒரு அம்பு தைத்து இறந்து கிடக்கிறாள். திகைத்துப் போன அந்த அந்தணன் அந்த மரத்தைச் சுற்றி வந்து பார்க்கும் பொழுது அங்கு ஒரு வேடன் வில் அம்புடன் நின்று கொண்டிருக்கிறான். உடனே அந்தணன், அந்த வேடன்தான் தன் மனைவியை அம்பெய்து கொன்றிருக்கிறான் என்று முடிவு செய்து, தன் மனைவியைத் தோளில் சுமந்து கொண்டு, தன் குழந்தையுடன் அந்த வேடனையும் இழுத்து வந்து பாண்டிய மன்னனிடம் முறையிடுகிறான். ஆனால் அந்த வேடன் தான் எந்த தவறும் செய்யவில்லை; சற்று இளப்பாறவே அந்த மரத்தடியில் நின்றதாகவும் அந்த அந்தணப் பெண்ணைத் தான் பார்க்கவே இல்லை என்றும் கூறுகிறான். பல வகைகளில் கேட்டும் அவன் தன் பதிலில் உறுதியாக இருக்கிறான்., வேடனுக்கு அந்தப் பெண்ணைக் கொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லாததினால் அவன் சொல்வது உண்மையாக இருந்தாலும், சந்தர்ப்ப சாட்சிகள் அவனுக்கு எதிராக இருப்பதாலும், வேறு யார் இந்தச் செயலைச் செய்திருப்பார்கள் என்பது தெரியாததாலும் மன்னன் குழம்பி மதுரை சொக்கநாதரை பிரார்த்திக்கிறான். சொக்கநாதரும் அன்று இரவு மன்னன் கனவில் தோன்றி மறுநாள் ஊருக்கு வெளியில் வணிகத் தெருவில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு அந்த அந்தணனையும் அழைத்து வந்தால் பார்ப்பனி இறந்தது யாரால் என்பதற்கு விடை கிடைக்கும் என்று கூறி மறைகின்றார்.

அவ்வாறே மறுநாள் மன்னனும் அந்தணனும் தாங்கள் இன்னார் எனத் தெரியாதவாறு மாறு வேடம் பூண்டு அந்தக் கல்யாணத்திற்குச் செல்கின்றனர். அங்கு அவர்கள் கண்ணுக்கு மட்டும் தோன்றுமாறு இரண்டு எம தூதர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர். ’இன்று அந்த மணமகன் உயிர் பிரியும் நாள்; யமன் நம்மை இவன் உயிரைக் கவர்ந்து வரப் பணித்திருக்கின்றான். ஆனால் இவன் உடலில் எந்தக் குறையோ, நோயோ இல்லாது இருக்கிறான்; இவனது உயிரை என்ன காரணம் காட்டி எடுப்பது?’ என்று ஒரு தூதன் மற்றொருவனிடம் கேட்கிறான் அதற்கு இன்னொரு தூதன் ‘நேற்று அந்தக் காட்டில் அந்த ஆலமரத்தில் எப்பொழுதோ சிக்கியிருந்த அம்பினை காற்றினால் விழவைத்து அந்த பார்ப்பனியின் உயிரைக் கவர்ந்ததது போல், இதோ வெளியில் கட்டியிருக்கும் மாட்டினை, இந்த மேளச் சத்ததினால் மிரள வைத்து, அது கயிற்றினை அறுத்துக் கொண்டு பாய்ந்து சென்று அந்த மணமகனை முட்டவைத்து அவனது உயிரைக் கவரலாம்’ என்று பதில் அளிக்கிறான்.

இதோ பரஞ்சோதி முனிவரின் வாக்கு.

ஆற்று ஆல் ஏறு உண்ட கணை அருகு ஒதுங்கும் பார்ப்பனியைக்
காற்றுஆல் வீழ்த்து எவ்வாறு கவர்ந்தோம் அப்படி இந்தச்
சாற்று ஆரவாரத்தில் தாம்பு அறுத்துப் புறம் நின்ற
ஈற்று ஆவை வெருள விடுத்து இவன் ஆவி கவர்க என்றான்.

பார்ப்பனனும் அவ்வாறு நடந்தால் வேடன் குற்றமற்றவன் என்பதனை தான் ஒப்புக் கொள்வதாகக் கூறுகிறான்.

சற்று நேரத்தில் அந்த மங்கல மேளச்சத்தத்தில் மிரண்ட பசுமாடு தாம்பினை அறுத்துக் கொண்டு பாய்ந்து சென்று மணமகனை முட்டிக்கொன்றது. மணவீடு பிணவீடாயிற்று.

மீண்டும் பரஞ்சோதி முனிவர்:

மண மகனே பிண மகனாய் மணப் பறையே பிணப்பறையாய்
அணி இழையார் வாழ்த்து ஒலிபோய் அழுகை ஒலியாய்க் கழியக்
கணம் அதனில் பிறந்து இறும் இக் காயத்தின் வரும் பயனை
உணர்வு உடையார் பெறுவர் உணர் ஒன்றும் இலார்க்கு ஒன்றும் இலை.

அழியும் இந்த உடம்பின் நிலை இதுதான் என்று முடிக்கிறார்.

உண்மை உணர்ந்த அரசன் அந்த வேடுவனை விடுவித்து அவனுக்கும் அந்த அந்தணனுக்கும் பொருள் கொடுக்க, இருவரும் அவரவர் வழியே சென்றனர்.

இந்தத் திருவிளையாடல் மதுரை சொக்கநாதர் ஆலய பிராகாரத்திலும், காருகுறிச்சிக்கு அருகில் அமைந்துள்ள ஆதங்குடி என்னும் ஊரில் சொக்கநாதர் ஆலய மேல் விதானத்தில் சித்திர வடிவிலும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

வலையில் படித்ததில் பிடித்தது ..

எழுதியவர் : (4-Dec-13, 8:57 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
Tanglish : ethu perithu
பார்வை : 187

மேலே