உண்மை கதைகள்

குழந்தைகள் விரும்பும் உள்ளம் கொண்ட நேரு மாமா சில நேரங்களில் குழந்தைகளை போலவே மாறி விடுவார். ஒரு சமயம் மதுரை மாவட்டத்தில் பயணத்தை மேற்கொண்ட போது வழியில் பலூன் விற்கப்பட்டுச் சென்றது இவரைக் கவர்ந்தது. காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார்.

''பலூன் என்ன விலை?'' என்று கேட்டார்.
படிப்பு வாசனை அறிந்திருந்த பலூன் வியாபாரி, நாளிதழ்களில் பிரதமர் நேருஜியின் படத்துடன் கூடிய செய்தியினைப் படித்துப் பழக்கப்படுத்தி வந்ததனால் நேருவைப் பார்த்ததும் அகமகிழ்ந்தார்.

''காசே வேண்டாம் சார்... ஓசியில் தர்றேன் சார்...'' என்றார் மகிழ்வோடு.
''ஏம்ப்பா காசு வேண்டாம் என்கிறாய்?''
''இந்த நாட்டிற்காக எவ்வளவோ செய்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு நான் ஏதாவது என் பங்குக்கு செய்ய வேண்டுமில்லையா?''

''இந்த நாட்டிற்கு நானொரு வேலைக்காரன்... என் கடமையைத்தான் நான் செய்கிறேன். எனக்கு சர்க்கார் சம்பளம் தருது... அந்தச் சம்பளத்தை வைத்து நான் சாப்பிட்டு விடுவேன்... உன்னோட வேலை பலூனை விற்பது. பலூனை விற்றுத்தான் உன் வயிற்றுப்பாட்டைக் காப்பாற்றுவாய்... அதனால் இனாமா ஒண்ணும் தரவேணாம்... மொத்த பலூன்களும் எத்தனை ரூபாய் சொல்லுங்க,'' என்று கேட்டார்.
இனி நாம் என்ன சொன்னாலும் நேருஜி கேட்க மாட்டார் என்பதை உணர்ந்த பலூன் வியாபாரி... ''இருபத்தைந்து ரூபாய்,'' என்று சொன்னார்.

நேருஜி தன் சட்டைப் பைக்குள் கைவிட்டுத் துழாவிப் பார்த்தார். வழக்கம் போல அவர் பை காலியாக இருந்தது.
தம்மோடு பயணம் செய்த ஒருவரிடம் இருபத்தைந்து ரூபாய் வாங்கி பலூன் வியாபாரியிடம் கொடுத்தார்.

கார் செல்லும் திசையில் வரும் சிறுவர்களுக்கெல்லாம் பலூனைக் கொடுத்து மகிழ்ந்தார்.
அதோடு மிச்சமிருந்த ஒரு பலூனை நேருஜியும் குழந்தை போல ஊதி சிறுவர்களிடம் வேடிக்கைக் காட்டி சிரித்து மகிழ்ந்து கொண்டே பயணத்தை மேற்கொண்டார்.

நன்றி தினமலர்!

எழுதியவர் : தினமலர்! (4-Dec-13, 8:55 am)
Tanglish : unmai kadhaigal
பார்வை : 183

மேலே