வயது முதிர்ந்தக் குழந்தைகள்

வெறிச்சோடிப் போயிருந்த
அந்த வெற்றுலகத்தில்...
அன்புக்கான ஏக்கம் மட்டும்
தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது!

அந்த மண்டலத்தை
என்னவென்று அழைப்பது?
மனிதம் வாழும்
கூடு என்றா?
முதிர்ந்த குழந்தைகளின்
கோவில் என்றா?
பெற்றவருக்காக பிள்ளைகள் கட்டியமைத்த
தனிக்குடித்தன கொட்டகை என்றா?
புறக்கணிக்கப்பட்ட புண்பட்ட
நெஞ்சங்களின் சரணாலயம் என்றா?

அங்கே...
நடக்கவே முடியாமல்,
நான்குச் சக்கர வண்டியில்
நகர்ந்துக்கொண்டிருந்தால் ஒருத்தி!
தடுக்கி விழுவோமா என்ற அச்சத்தில்
தாங்கிப் பிடிக்க நாதியற்று,
தடியோடு தள்ளாடிக்கொண்டிருந்தார் ஒருவர்!

இவர்களைப் போலவே..
அங்கே..
அறுபதுக்கும் மேற்பட்டவர்கள்...
கூண்டுக்கிளிகளாகவும்,
குற்றவாளிகளாகவும்..

நன்றியில்லா நாய்களை
சேய்களாய் ஈன்றெடுத்த
தவறைத் தவிர,
வேறேதும் செய்திடவில்லை...
அந்த வயது முதிர்ந்தக் குழந்தைகள்!!

அந்தப் பொக்கை வாய்களில்,
பொன்னைவிட மேலாக
மின்னிய புன்னகைகள்!
தடவிக் கொடுக்கும்போது
தன்னிலையை மறந்து,
தமக்கென யாருமில்லையென
ததும்பி வரும் கண்ணீர்த்துளிகள்!

ஆடிப்பாடும் போது மட்டும்
அவர்களை மறந்துப்போனார்கள்!
அன்பாய் பேசும்போது,
அவர்தம் பிள்ளைகளின் நினைவுகளை
அணைத்துக்கொண்டார்கள்!

"தவமிருந்துப் பெற்றேன், தங்கமாய் காத்தேன்
தவழும் வயதில் தாங்கிப் பிடித்தேன்..
தரணியில் உயர்ந்திட தட்டியும் கொடுத்தேன்...
தாய் என் வளர்ப்பில் தவறேதும் இல்லை"
இது அங்கிருந்த முனியம்மாளின் முனுகள்.

"நோய்வாய்ப்பட்டு நொந்து போயிருந்தேன்..!
என் மகளோ..
நோய் பற்றிக் கொள்ளுமென பயந்து போயிருந்தாள்!
கூனிக் குறுகி,
அடக்கி அமிழ்ந்து
இருமினேன்; தும்மினேன்!
இனி..
சுதந்திரமாய் இருமலாம்..சுதந்திரமாய் தும்மலாம்..
ஆனால் இங்கில்லை,முதியோர் இல்லத்தில்
என்று அனுப்பிவைத்தாள்!
அவசரமாய் விட்டுச் சென்றதால்..
பாதை மறந்து போனாள் போலும்..
இன்னமும் வரவே இல்லை!"
இது கருப்புசாமி தாத்தாவின் கண்ணீர் வடித்த கதை..

இப்படித்தான்..
என் பிறந்தநாள் அவியப்பத்தில்
ஏற்றி வைத்த மெழுவர்த்திகள் போல...
கருகி கருகிப் போன அவர்களின் கதையும்..
உருகி உருகிப் போன என் மனமும்...!

அந்த
திறந்தவெளி சிறைச்சாலையில்
எங்கும் இரைந்துக் கிடந்தன
குமுறல்கள்...
அங்காங்கே சிதறிக்கிடந்தன
அவலங்கள்...
அன்பு மட்டுமே
அவற்றிற்கு நிவாரணமாக...!

அந்த முதிர்ந்தப் பிஞ்சுக் குழந்தைகளின்
அன்பு வேண்டுகோள் மட்டும்
என் மனதை கொந்தி எடுத்து கூர் போட்டது...
மீளப் பெறவியலாத அந்த
இறுதி வசனம்..

"உன் பிறந்த நாளுக்கு மட்டும்
வந்து போகாதே..
எங்கள் இறந்த நாளுக்கும் வந்து போ"

கேட்ட பொழுதில் கண்ணீரை மட்டுமே
பதிலாய் வடிக்க முடிந்தது..
மனிதத்தை இழந்து விட்ட
மிருகங்களை கடிந்துக் கொண்டது
என் மனம்...

எழுதியவர் : தமிழின் மகள் ஹேமலதா (4-Dec-13, 10:53 am)
பார்வை : 88

மேலே