வேசிச்சந்ததிகள்

கூட்டுச்சாலை ஆலமரத்து
வாதங்களில் ஒருவனை
ஒருவன் சத்தமிட்டுக்
கூவுகிறான்.....
"போடா வேசி மவனே "...
எதிரிலிருந்த உலோகமோ
உலக்கையோ ரத்தம்
சுவைக்கிறது அடுத்த நொடி...!!!

வக்கிரங்களும்... வதமும்..
கலந்து கலைந்து மறைகிறது
சதைக் கூடுகள்...!

எந்தப் பூக்கள் கெஞ்சுகின்றன
எனைப் பறித்துச் சூடென்று...?
திருவிழா மாலையாகப்
போகிறாயென வஞ்சித்து
தெருவில் விட்டெறிந்தால்
என்ன செய்யும் பூ...?

எந்தத் திரி ஏங்குகிறது
எனை கொளுத்திப் போவென்று....?
குத்துவிளக்குச் சுடராவாய்
எனச்சொல்லி
இடுகாட்டுப் பந்தங்களேற்றினால்
என்ன செய்யும் திரி....?

எந்தப் பழம் அழைக்கிறது
எனைப் பறித்துப் போவென்று...?
பூசைத்தட்டில் பொருளாவாய்
என மொழிந்து
சந்தைச் சகதியில் நசித்தெறிந்தால்
என்ன செய்யும் கனி...?

பிறப்பதெல்லாம் இங்கு
அட்சய பாத்திரங்களே...!!
அட்சயங்களில் இரத்தமூற்றிக்
குடித்தும் கொடுத்துமாய்
வயிறு வளர்க்கிறது
இந்த வல்லூறுச் சமூகம்..!!!

அமுதம் சுரக்கமட்டுமே தெரியும்
அமுத சுரபிகளுக்கு..
செக்கிலிட்டுப் பிழிந்து
சிதைப்பது
சிறுமூளை பிழன்ற நாம்...!!!

எப்பொழுதுமே
அட்சயத்திற்கும் அமுத சுரபிக்கும்
ஒரே குணம்.. ஒரே மனம்...!!!
கொடுப்பதொன்றே..
பாத்திரங்களில் வலிந்து
கவிழும் குப்பைகளாய்
நாம்..!!!

கலந்து படர்ந்தெழுந்த
எந்தக் குப்பைக்கும் இங்கு
தகுதியில்லை
வேசிச் சந்ததிகளென்று
வசைபாட...!!!

எழுதியவர் : சரவணா (4-Dec-13, 10:47 am)
பார்வை : 73

மேலே